×

சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் இன்று முதல் ஜன.1 வரை வனச்சுற்றுலா

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன பகுதிக்கு இன்று முதல் வரும் ஜனவரி 1ம் தேதி வரை வனச்சுற்றுலா அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர் வனப்பகுதிக்கு பயணிகளை அழைத்துச்செல்ல வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் துவங்கப்பட்டது.புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி ஆகிய 6 வனச்சரகங்களிலும் தனித்தனியாக வேன் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் இருமுறை பயணிகளை அழைத்துச்சென்று வனப்பகுதியை பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

இதற்கென தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட முதியனூரிலிருந்து ஜூரகள்ளி வரை பயணிக்க ஒரு நபருக்கு ரூ.650, தலமலை வனச்சரகத்திற்குட்பட்ட திம்பத்திலிருந்து திப்புசுல்தான் கண்காணிப்பு கோபுரம் வரை பயணிக்க ரூ.500, ஆசனூர் வனச்சரகத்திற்குட்பட்ட ஆசனூரிலிருந்து ஹூலிகெரப்பட்டி வரை பயணிக்க ரூ.650, பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட காராச்சிக்கொரை வனசோதனைச் சாவடியிலிருந்து தெங்குமரஹாடா வரை பயணிக்க ரூ.650, சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட திம்பத்திலிருந்து கோட்டாடை பிரிவு வரை பயணிக்க ரூ.650, கேர்மாளத்திலிருந்து சூட்டிங் லாட்ஜ் ரோடு வரை பயணிக்க ரூ.650 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் நேரடியாக வனத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து வனச்சுற்றுலா சென்று வந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்-லைன் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெனhttp://str-tn.org/vanaporni-nature-education-programme. என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். மேலும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 2நாட்கள் மட்டுமே ஆன்-லைனில் முன்பதிவு செய்ய முடியும். சனி மற்றும் ஞாயிறு என இருதினங்கள் மட்டுமே சுற்றுலா செல்ல அனுமதி என்ற நிலையில், தற்போது பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்விடுமுறை தினங்கள் என்பதால் இன்று 25ம் தேதி முதல் 2019 ஜனவரி 1ம் தேதி வரை 8 நாட்களுக்கு தொடர்ச்சியாக வனச்சுற்றுலா திட்டத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து சுற்றுலா செல்லலாம் என புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sathiyamangalam Tiger Reserve Forest ,Jan , Tiger Archive, Sathyamangalam, Forest Department
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்