×

ஆண்டிபட்டியில் வெங்காயத்தில் கருகல் நோய்

* விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி : பல நூறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயத்தில் கருகல் நோய் தாக்கியுள்ளதால், ஆண்டிபட்டி பகுதி  விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி  விவசாயம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள அரைப்படித்தேவன்பட்டி, கரட்டுபட்டி,  சீரங்கபுரம், புலிமான்கோம்பை, குன்னூர், கண்டமனூர், தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ராஜதானி, காமாட்சிபுரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரபரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் காரணமாக  வெங்காயத்தில் கருகல் நோய்  ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகி, சுருங்கி காணப்படுகிறது. இதனால் பெருத்த நஷ்டமடைந்துள்ளதுடன், வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கவலையில் உள்ளனர். இதனால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி முருகன் கூறுகையில்,` கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது. அதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விதை வெங்காயத்தை வாங்கி சாகுபடி செய்தேன். அதற்கு உரிய முறையில் தண்ணீர், உரம், மருந்து உள்ளிட்ட பராமரிப்பு பணி செய்தேன். ஆனால் அறுவடை நேரத்தில் வெங்காயத்தில் விழுந்த கருகல் நோயால் வெங்காயத்தின் தன்மையே மாற்றி விட்டது. இதனால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடன்களை வாங்கித்தான் விவசாய வேலைகளை  செய்து வருகிறேன். இந்நிலையில் வெங்காயத்தில் கருகல் நோய் தாக்கியுள்ளது பெரும் கவலையளிக்கிறது. எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கூறினார். எனவே, வெங்காய விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andipatti ,onion ,Miscarriage disease,farmers
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு