×

பிறந்த தேதியை குறிப்பிடுவதில் எழுத்துப்பிழை 2 பேரை குரூப்-2 பணி பட்டியலில் சேர்க்க வேண்டும்: டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விண்ணப்பத்தில் பிறந்த தேதியை குறிப்பிடும்போது ஏற்பட்ட எழுத்துப் பிழையைக் காரணம் காட்டி குரூப்-2 பணிக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட 2 பேருக்கு பணி வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.கடந்த 2017 ஆகஸ்ட் 6ம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு நடத்தியது. நேர்முகத்தேர்வு இல்லாமல் 1953 பதவிகளுக்கான இந்த தேர்வை திருவண்ணாமலை மாவட்டம் செய்யார்  அருகேயுள்ள எம்.கே.பூண்டி பகுதியைச் சேர்ந்த எம்காம் பட்டதாரி ஜெ.பிரேமா, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி டி.அசோக்குமார் ஆகியோர் எழுதினர். இருவரும் முறையே 387 மற்றும் 25வது ரேங்க்  பெற்றனர். ஆனால், அவர்களின் பெயர் இறுதிப் பட்டியலில் வரவில்லை. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் விசாரித்தபோது இருவரும் விண்ணப்பத்தில் தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளதாக  பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும் தங்களது பெயர் இறுதிப் பட்டியலில் இடம்பெறுவதற்கான ஒரிஜினல் சான்றிதழ்கள் சரிபார்ப்பில் சேர்க்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள்  நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில்  விமல் பி.கிரிம்சன், வி.ருத்ராபதி ஆகியோர் ஆஜராகி வாதிடும்போது, மனுதாரர்கள் விண்ணப்பத்தில் பிறந்த தேதியை குறிப்பிடும்போது  எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சியில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கமும் அளித்துள்ளனர். மொத்தமுள்ள 1953 பணியிடங்களில் அசோக்குமார் பொதுப்பிரிவில் 25வது ரேங்கிலும், இட  ஒதுக்கீட்டில் 12வது ரேங்கிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். பிரேமா பொதுப்பிரிவில் 387வது ரேங்கிலும், இட ஒதுக்கீட்டில் 165வது ரேங்கிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பிறந்ததேதி சான்றிதழ்  சரிபார்ப்பின்போது திருத்திக்கொள்ள வாய்ப்பு உள்ள நிலையில் தகுதியுள்ள இருவருக்கும் பணி நியமனத்திற்கான ஒரிஜினல் சான்றிதழ் சரிபார்ப்பில் வாய்ப்பு தரப்படவில்லை என்று வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வழக்கு விசாரணையின்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கில் பதில் மனு  தாக்கல் செய்யத் தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது டைப்பிங்கில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேண்டுமென்றே ஒருவரும் தவறு செய்வதில்லை. மனுதாரர்களின் பிரச்னையும் இதுதான். அவர்களுக்கு  வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான் இந்த நீதிமன்றத்தை தேடி வந்துள்ளனர். இருவரும் பிறந்ததேதியை குறிப்பிடுவதில் எழுத்துப்பிழை செய்துள்ளனர்.

ஆனால், வாய்மொழி தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே மனுதாரர்கள் இருவரும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள இந்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த கவுன்சிலிங்கில் இருவரும் வெற்றி  பெற்றுள்ளனர். மனுதாரர்கள் செய்த எழுத்துப்பிழை அவர்களுக்கு பணி வழங்குவதற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது. எனவே, மனுதாரர்கள் தகுதியானவர்களாக இருக்கும் பட்சத்தில் இருவரது பெயர்களையும் பணி நியமன  பட்டியலில் சேர்க்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : birth ,DNPCC High Court , Date of Birth, Group-2 Work, TNPSC, High Court
× RELATED தெற்கு கோனார்கோட்டையில் தேர்வு,...