×

சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு 21 போலீசார் உட்பட 22 பேரும் விடுதலை : சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மும்பை: சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 21 போலீசார் உட்பட 22 பேரையும் விடுதலை செய்து மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது. குஜராத்தில் கடந்த 2005ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராகவும், பாஜ தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். அப்போது, சொராபுதீன் ஷேக், அவருடைய மனைவி கவுசர் பி ஆகியோர் மோடியை கொலை செய்ய  திட்டமிட்டதாக குஜராத் போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, இருவரும் ஐதராபாத்தில் இருந்து பஸ்சில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலிக்கு சென்று கொண்டிருந்தபோது குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்இந்த நிலையில், சொராபுதீன் கடந்த 2005 நவம்பர் 26ம் தேதி அகமதாபாத் அருகே குஜராத் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி மூன்று நாட்களுக்குப் பிறகு நவம்பர் 29ம் தேதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சொராபுதீன் ஷேக்கின் உதவியாளர் துள்சிராம் பிரஜாபதியும் 2006 டிசம்பர் 27ம் தேதி குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் சாப்ரி என்ற இடத்துக்கு அருகே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூன்று பேருமே போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டி சொராபுதீன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.  வழக்கை விசாரித்த சிபிஐ அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா உட்பட 38 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையடுத்து, அமித் ஷா கடந்த 2010 ஜூலை 25ம் தேதி கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குஜராத்தில் வழக்கு விசாரணை நடந்தால் நியாயமாக நடக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கை குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

மும்பையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. கடந்த 2014ம் ஆண்டு அமித் ஷா உட்பட 16 பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மீதமுள்ள 21 போலீசார் உட்பட 22 பேருக்கு எதிராக மட்டும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் 210 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் 92 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர். வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த 5ம் தேதி தீர்ப்பை தள்ளிவைத்த சிறப்பு நீதிபதி எஸ்.ஜே.சர்மா, டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது. மேலும், சூழ்நிலை ஆதாரங்களும் போதுமானதாக இல்லை. இதனால், அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிக்கிறேன். சொராபுதீன், பிரஜாபதி குடும்பங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால், ஆவணங்களில் உள்ள உறுதியான ஆதாரங்கள் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில் நீதிமன்றம் இருக்கிறது’’ என்று நீதிபதி சர்மா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : encounters ,CBI , Saurabhuddin fake encounter case,21 cops ,release, CBI special court verdict
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...