×

திருவலம் பொன்னையாற்றில் கால்வாய் தடுப்புகளை உடைத்து வாகனங்களில் மணல் கொள்ளை

திருவலம்: காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த குகையநெல்லூர் ஊராட்சி திருவலம்-பொன்னை செல்லும் சாலையோரம் பொன்னையாறு உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் மழைநீர் இந்த பொன்னையாற்றின் வழியாக வந்து பாலாற்றில் கலக்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது குகையநெல்லூர் ஊராட்சியில் தனியார் கம்பெனி அருகில் கெம்பராஜபுரம் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசனநீர் கால்வாய் மதகு உள்ளது. இந்த மதகின் வழியாக பொன்னைாற்றில் இருந்து வரும் உபரிநீர் விவசாய பாசனத்திற்கு செல்கிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னையாற்றில் உள்ள சமூக காடுகள் உள்ள பகுதிக்கு திருவலம்-பொன்னை தார் சாலையில் இருந்து லாரிகள் சென்று வர தனி பாதை அமைத்தும், ஏரி பாசனநீர் கால்வாயில் இருபுறம் உள்ள தடுப்புகளை உடைத்தும் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இந்த மணல் கொள்ளையால் ஆற்றில் நிலத்தடி நீர் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. மேலும், மணல் அள்ளப்பட்ட சமூக காடுகள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட தைல மரங்கள் வனத்துறையினரால் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

ஆற்றில் இருந்து அள்ளி வரப்பட்ட மணல் பொன்னை கூட்டுரோடு, இபி கூட்டுரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,எங்கள் பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு பொன்னையாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீருக்காக பயன்படுத்தி வருகிறோம். மேலும், இப்பகுதியில் இருந்து வரும் குடிநீர் மாசற்ற நிலையில் சுகாதாரமானதாக கிடைக்கிறது.
கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது கிடையாது. இதுபோன்று ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடிநீர் பாதித்து குடிநீர் தரமற்றதாகவும், வரும் காலங்களில் குடிநீருக்கே தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாவதற்கு முன்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bridge ,sand robbery ,Thiruvallam Ponniyar , Canal prevention, sand plunder
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...