×

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் : முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை : வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நாட்டுக் கோழி வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருப்பதாக கால்நடை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்கத்தின் கோழியின ஆராய்ச்சி நிலையம் சார்பில் புவி வெப்பமயமாதல் சூழலில் பாதுகாப்பு, உற்பத்தி திறன் மேம்பாடு மற்றும் வணிக மயமாக்கள் வாய்ப்புகள் என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு நேற்று காலை தொடங்கியது. கோழியின ஆராய்ச்சி நிலைய அமைப்பு செயலாளர் ஓம் பிரகாஷ் வரவேற்றார். கால்நடை பல்கலைக்கழக இயக்குநர் ரமேஷ் சரவணக்குமார், கோழி உற்பத்தி மேலாண்மை கல்லூரி டீன் மணி முன்னிலை வகித்தனர். கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழ்நாடு கோழி வளர்ப்பில் முன்னிலையில் உள்ளது. கிராமப்புற புறக்கடை நாட்டுக் கோழி வளர்ப்புக்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி உதவியுடன் 50 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகஅரசு ரூ.38,750 மானியமாக வழங்குகிறது. மேலும் ஏழை மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு 25 கோடியில் 38,500 பெண்களுக்கு 50 நாட்டுக்கோழிகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. 77,000 பயனாளிகளுக்கு ₹50 கோடி செலவில் நாட்டுக் கோழி திட்டத்தை விரிவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். முடிவில் கோழியின ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் எழில்வளவன் நன்றி கூறினார். பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுவிடும். கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், முதியவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் கோழிப்பண்ணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கோழிக்கும் 100 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுக்கும் பணியும் நடக்கிறது. புதிய கோழிப்பண்ணைகளை நிறுவ மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக வட்டியில்லாத கடன் உதவி வழங்கப்படும். புவி வெப்பமயமாதலிலிருந்து கோழிகள் மற்றும் கால்நடைகளை காக்கவே நாட்டுக் கோழி வளர்ப்பு பாதுகாப்பான கால்நடை வளர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டுக்கோழிகள் புவி வெப்பமயமாதல் சூழலை தாங்கும் சக்தி உள்ளது. 4 வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்துடன் கறவை பசுக்கள் வழங்கவும் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 50 நாட்டுக் கோழிகளை வழங்க மத்திய அரசிடம் இருந்து 150 கோடி நிதி உதவி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,underprivileged , Below the poverty line , Rural Planning, Chief Minister starts
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...