×

பாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா வெளிநாடு தப்பினாரா? சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு: பாலியல் புகாரில் தொடர்புடைய சாமியார் நித்யானந்தா, போலீஸ் மற்றும்  நீதிமன்றத்திற்கு பயந்து  வெளிநாட்டிற்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற  சந்தேகம் பெங்களூரு சி.ஐ.டி போலீசாருக்கு எழுந்துள்ளது. பெங்களூரு பிடதி  ஆசிரமத்தில்  பணியாற்றிய ஆர்த்தி  ராவ் என்பவர் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்தார். , கடந்த 2 மாதங்களுக்கு  முன் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பணியாற்றி வந்த சீடர் ஒருவர் பெங்களூரு  சி.ஐ.டி சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அதில்,  நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் சிலர் எனது ஆபாச வீடியோவை சமூக  வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்று கூறியிருந்தார். அந்த புகாரை ஏற்ற சி.ஐ.டி சைபர் கிரைம்  போலீசார், நித்யானந்தாவிற்கு, நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக  வேண்டுமென்று  உத்தரவிட்டனர். ஆனால், நித்யானந்தா ஆஜராகவில்லை. மாறாக அவர்  தலைமறைவாகி விட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் வட மாநிலத்தில்  இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை தேடி சென்றபோது, அங்கும் அவர்  இல்லை. ஆனால், நித்யானந்தாவின் தியானம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வெளியாகிக் கொண்டே இருந்தது.

கடந்த  அக்டோபர் மாதத்தில் முன்னாள் பெண் சீடர் ஒருவர் தனது ஆபாச வீடியோவை  நித்யானந்தாவும், அவரது சீடரும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக அதே சைபர்  கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த இருவேறு புகாரை ஏற்று வழக்கு  பதிவு செய்த சி.ஐ.டி போலீசாருக்கு அவரை கைது செய்யவேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரிப்பதற்காக சி.ஐ.டி போலீசார் மடத்திற்கு  சென்றனர். அங்கிருந்த சீடர்கள் நித்யானந்தா இந்தியாவில் இல்லை.  வெளிநாட்டிற்கு சென்றதாக கூறினர். இதையடுத்து சி.ஐ.டி போலீசாருக்கு  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  நித்யானந்தா தன் மீதான விசாரணை புகார்களை தள்ளுபடி செய்யும்படி மனுதாக்கல்  செய்திருந்தார். இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை.

நித்யானந்தாவின் பாஸ்போர்ட் கடந்த செப்டம்பர் மாதத்துடன்  காலாவதியாகி விட்டதாக கூறப்படுகிறது. புதிய பாஸ்போர்ட் கோரி நித்யானந்தா  சார்பில் போலீசில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், போலீசார் அவர் மீதான வழக்கை  காரணம் காட்டி, பாஸ்போர்ட் வழங்க முன் வரவில்லை.  இதையடுத்து நித்யானந்தா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் வெளிநாட்டில் அகதியாக அடைக்கலம் புகுவதற்கு அனுமதிக்க கோரி மனுதாக்கல்  செய்தார். ஆனால், அதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் எந்த பதிலும்  அளிக்கவில்லை. ஏற்கனவே, இந்தியாவில் பல்வேறு தொழில் அதிபர்கள் அதிகளவு கடன்  வாங்கிவிட்டு வெளி நாட்டில் தலைமறைவாக இருப்பதால், நித்யானந்தாவும்  அதுபோன்று முயற்சிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதை உறுதி  செய்வதற்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பெங்களூரு பாஸ்போர்ட்  அலுவலகத்திற்கு நித்யானந்தா குறித்த தகவலை வழங்கும்படி கடிதம்  அனுப்பியுள்ளனர். அதற்கு பாஸ்போர்ட் அலுவலகம் இன்னும் பதில் அளிக்கவில்லை  என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள கரேபியன் கெமென்  தீவுக்கு நித்யானந்தா தப்பியோடி இருக்கலாம் என்ற சந்தேகம்  எழுந்துள்ளது. ஏனென்றால், நித்யானந்தாவுக்கு வெளி நாடுகளில் ஆசிரமம்  தொடங்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்துள்ளது. . ஒருவேளை அதற்காக  அவர் வெளி நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கலாமோ என்ற சந்தேகம் சி.ஐ.டி சைபர்  கிரைம் மற்றும் பெங்களூரு போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி நித்யானந்தாவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nithyananda ,CID ,investigation , Nithyananda,sex case,CID,cops,investigation
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...