×

முதல்வரை வரவேற்பதில் அதிமுகவினர் மோதல்: அமைச்சர் கருப்பணன் ஆதரவாளர் 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு

பெருந்துறை:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் 5 நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை திரும்ப கடந்த 16ம் தேதி இரவு ஈரோடு வழியாக காரில் கோவை விமான நிலையம் வந்தார். வழியில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். அங்கிருந்த அமைச்சர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து, அதிமுகவினர் இரு பிரிவாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில், பெருந்துறையை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் சங்கர் (39), பெருந்துறை காவல்நிலையத்தில் நேற்று அளித்த புகார் மனுவில்,‘கடந்த டிசம்பர் 16ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெருந்துறை அருகே விஜயமங்களம் டோல்கேட் பகுதியில் வரவேற்பு அளிக்க சுமார் 40 பேரை அழைத்துக்கொண்டு சென்றேன். டோல்கேட் அருகே நின்றிருந்த ஜெயக்குமார், திங்களூர் கந்தசாமி, ஓலப்பாளையம் பழனிச்சாமி, பாலு (எ) பாலசுப்பிரமணியம், செந்தில் ஆகிய ஐந்து பேர் என்னை தடுத்து நிறுத்தினர். ஏன் என்னை தடுக்கிறீர்கள்? என கேட்டேன்.

அப்போது, ஜெயக்குமார் மற்றும் கந்தசாமி ஆகிய இருவரும் என்னை ஜாதி பெயரை சொல்லி கெட்டவார்த்தையால் திட்டினர். எனது கையை முறுக்கி கீழே தள்ளினர். இதனால், நான் அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். என்னை ஜாதி பெயரை ெசால்லி திட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இதுபற்றி பெருந்துறை டிஎஸ்பி ராஜ்குமார் விசாரணை நடத்தினார். அவரது உத்தரவின்படி குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு உள்பட ஏழு பிரிவுகளில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள், அமைச்சர் கருப்பணனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karunanan ,House ,supporter , Chief Minister,House,welcomed,clash,Minister Karunanan,supporter,accused,five abusers
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்