×

இந்த ஆண்டில் ஆந்திராவை தாக்கிய மூன்றாவது புயல் காக்கிநாடா அருகே பெய்ட்டி கரையை கடந்தது

திருமலை: காக்கிநாடா - அமலாபுரம் - யானம் இடையே பெய்ட்டி புயல் கரையை கடந்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்ட தென்னை, வாழை, நெற்பயிர்கள் சேதமடைந்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம், காக்கிநாடா- அமலாபுரம்- யானம் இடையே நேற்று மதியம் 2 மணிளவில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது. அப்போது தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 80 கி.மீ. வேகத்தில் காகுளம், ஒடிசா நோக்கி புயல் சென்றது. இதன் காரணமாக கிழக்கு கோதாவரி, விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்ட தென்னை, வாழை, நெற்பயிர் சேதமடைந்தது. புயல் காரணமாக கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உட்பட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், 22 ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. சில ரயில்கள் புறப்படும் நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது.  

புயல் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆந்திர கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட விமான பயணிகள் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் வந்த விமானம் ஐதராபாத்தில் தரை இறக்கப்பட்டது. சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல வேண்டிய விமானம் சென்னையில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே கனமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து கண்டறிய டிரோன் கேமரா பயன்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்பிறகு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் ஆந்திர மாநிலத்தை தாக்கும் மூன்றாவது புயல் பெய்ட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,coast ,Andhra ,Kakinada ,Baiti , Third storm , hit Andhra, Baiti coast,Kakinada
× RELATED சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்