×

கோவை டாஸ்மாக் பார் கொலையில் 4 பேர் ஆயுள் தண்டனை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கோவை துடியலூர் டாஸ்மாக் பாரில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 4 பேரை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கோவை,  துடியலூரில் உள்ள டாஸ்மாக் பாருக்கு கடந்த 2012,  அக்டோபரில் பெருமாள் என்பவர் நண்பர்களுடன் சென்றார். அங்கு விஜி, நாகேந்திரன், ராஜன், சந்தோஷ் உள்ளிட்டோரும் மது அருந்தினர்.  அப்போது, ஒருவர் வாந்தி எடுத்துள்ளார். அவரை விஜி திட்டினார். அப்போது, பெருமாள்  ஏன் அந்த ஆளை திட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த விஜியும்,  அவரது நண்பர்களும் பெருமாள் மற்றும் அவருடன் வந்தவர்களுடன் தகராறு செய்தார்.  பின்னர், பெருமாளை கத்தியால் குத்தினார். அவரது  நண்பர்களையும் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த பெருமாள் மருத்துவமனையில் இறந்தார்.

இது தொடர்பாக விஜி, நாகேந்திரன் உள்ளிட்ட 7 பேரை போலீசார்  கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2016 நவம்பர் 5ம் தேதி விஜி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து விஜி, நாகேந்திரன், ராஜன், சந்தோஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.  நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார்  அமர்வு இதை விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு: முதல் தகவல் அறிக்கையை சம்மந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் 12 மணி நேரம் தாமதமாக போலீசார்  தாக்கல் செய்துள்ளனர். இதில் போலீசாரின் மெத்தனம் வெளிப்பட்டுள்ளது.
3வது சாட்சியிடம் கொலை நடந்த மறுநாள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியத்தில் கூறியுள்ளார்.

படுகாயமடைந்த 3வது சாட்சி 8ம் தேதி பேசும் நிலையில் இல்லை. அவரை 9ம் தேதி அவசர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். நினைவில்லாமல் இருந்த அவரிடம் , கொலை நடந்த மறுநா்ளே  வாக்குமூலம்  பெறப்பட்டது என்று இன்ஸ்பெக்டர் கூறுவது ஏற்கக் கூடியதல்ல. மேலும், 3வது சாட்சியின் கையெழுத்தில் பல வேறுபாடுகள் உள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறிய 2வது சாட்சியிடம் குற்றவாளிகளை அடையாளம்  காட்டுவதற்காக 3 ஆண்டுகளுக்குப் பிறகே அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையே கட்டுக்கதைபோல் ஜோடித்து தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பே இந்த வழக்கை முழுமையாக சிதைத்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் 3 பேருக்கும் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. ஒருவர் மட்டும் மேல் முறையீடு  செய்வில்லை. அவர் கோவை மத்திய சிறையில் உள்ளார். அவர் மேல் முறையீடு செய்வதற்கான உதவிகளை கோவை சட்டப் பணிகள் ஆணையம் இந்த தீர்ப்பு நகலை அவரிடம் தர வேண்டும். இவ்வாறு தீர்ப்பில்  கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore Taskmaker ,killing ,Chennai High Court , Coimbatore Tashmak Look, Murder, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...