×

வேட்பாளரின் கணவர் மீது தாக்குதல் வழக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பெயர் நீக்கத்தை ஏற்ற மாஜிஸ்திரேட் உத்தரவு ஐகோர்ட்டில் ரத்து

சென்னை: கொலை முயற்சி வழக்கில் முன்னாள் எம்எல்ஏவின் பெயரை நீக்கம் செய்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ஏற்ற விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து  செய்துள்ளது.  கடந்த 2011ல் நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட ஜெயந்தி என்பவர் 2011 மார்ச் 23ல் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது,  அவருடன் அவரது கணவர் மூர்த்தியும் வந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் மூர்த்தியை கத்தியால் குத்தினர். இது, தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசில் மூர்த்தி கொடுத்த புகாரில்,  ரிஷிவந்தியம் தொகுதி  முன்னாள் எம்எல்ஏ சிவராஜ், அவரது தம்பி கார்த்திகேயன் ஆகியோர் தங்களது ஆட்களை அனுப்பி கொலை செய்ய முயன்றதாக கூறப்பட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில் சிவராஜ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் சிவராஜ்  அவரது தம்பி உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதை மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து மூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், முதல் தகவல் அறிக்கையில் உள்ள பெயர்களை  குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னர் புகார்தாரருக்கு நோட்டீஸ் தரவில்லை, எனவே, குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை ரத்து செய்ய வேண்டும்  என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூர்த்தி நேரில் ஆஜராகி வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, முதல் தகவல் அறிக்கையில் இருந்த பெயர்கள் நீக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ஏற்ற, விழுப்புரம் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து  செய்தார். மனுதாரர் தனது கோரிக்கை மற்றும் எதிர்ப்பு மனுவை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை பரிசீலித்து விழுப்புரம் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,attack ,husband Cancellation , Candidate's husband, magistrate, jury
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...