×

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல முன்னாள் தலைமை செயலர் எந்த குறிப்பையும் வழங்கவில்லை: கிரிஜா வைத்தியநாதன் கடிதத்தால் பரபரப்பு

சென்னை: தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல குறிப்பு எதுவும் அளிக்கவில்லை என்று கிரிஜா வைத்தியநாதன் விசாரணை ஆணையத்திற்கு அனுப்பிய  கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவிடம்  விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ராம மோகன ராவ், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சரவையின் கவனத்திற்கு ஒரு  குறிப்பை அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.   
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை ஆணையம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அந்த கடிதத்தில், 5 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு அரசுக்கு  அறிக்கை சமர்பித்ததா?, அறிக்கை வழங்காமல் இருப்பின் அவர்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன?, சுகாதாரத்துறை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அமைச்சரவை அறிக்கை அனுப்பியதா,  முன்னாள் தலைமை செயலாளர் ஜெயலலிதா உடல் நிலைகுறித்தும், சிகிச்சை குறித்தும் அரசுக்கோ, ஆளுநருக்கோ, மத்திய அரசுக்கோ, அப்போதைய பொறுப்பு முதல்வருக்கோ அறிக்கை அளித்தாரா என்று அதில்  கூறப்பட்டுள்ளது.

இந்த கடித்திற்கு தற்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதில் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அது பற்றிய  நிகழ்வை ஓ.பன்னீர் செல்வம் கவனித்து வந்தார். ஆனால், அவரிடம் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை  அளிக்க வேண்டும் என்று குறிப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. கடந்த 2016 அக்டோபர்  19ம் தேதி அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூட ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று தான் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை  தொடர்பாக தினமும் காலையில் பிரதாப் ரெட்டி தலைமையிலான டாக்டர் குழுவினர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அமைச்சர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜெயலலிதா ஆலோசகராக  இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களிடம் அப்போலோ நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே, ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்போதைய தலைமை செயலாளர் பிரத்யேக அறிக்கை எதையும்  சமர்பிக்கவில்லை. இதனால், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கருத்து எழவே இல்லை.  என்று அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் அளித்த வாக்குமூலத்திலும், தற்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கூறியதிலும் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்து இருப்பது  விசாரணை ஆணைய வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Secretary ,Girija Vaidyanathan ,Jayalalitha , Jayalalitha, abroad, Former Chief ,Secretary,Girija Vaidyanathan
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை