நிரவ் மோடியை தொடர்ந்து மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்

டெல்லி: வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியின் நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி. மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிரவ் மோடியின் மோசடி வெளியில் தெரிய வரும் முன்னரே அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பயணம் செய்தும் வருகிறார்.

இதை தொடர்ந்து சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டு அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. நிரவ் மோடிக்கு சொந்தமான 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற மெகுல் சோக்சிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை முடக்கி அவர் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்யும் உத்தரவை பெறுவதற்கான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மெகுல் சோக்சியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஐ வேண்டுகோளை ஏற்று இண்டர்போல் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் அவர் எந்தநாட்டில் இருந்தாலும் அவரை கைது செய்து ஒப்படைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பீகாரில் 30 ஆண்டுகளாக நடந்த முறைகேடு...