×

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை மூடுவதற்கு பதில் மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

சென்னை: மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடுவதற்கு பதில், அவற்றை அனைத்து வசதிகளும் கொண்ட மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும். இதற்கான நிதியை தாராளமாக ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், போதிய வகுப்பறைகள், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், மழலையர் வகுப்புகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்தால், அடுத்த சில ஆண்டுகளில் இப்பள்ளிகள் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பது உறுதி என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

தமிழ்நாட்டில் ஓர் அரசுப் பள்ளி கூட மூடப்படாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி வரும் நிலையில், மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள 1,324 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.  மாணவர்களின் கல்வி நலனில் அக்கறையில்லாத தமிழக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.அரசு பள்ளிகளில் அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களால் அவற்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. கடந்த கல்வியாண்டின் இறுதியில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 810 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. அதுமட்டுமின்றி, எந்த ஒரு பள்ளியையும் தமிழக அரசு மூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறிவந்தார். ஆனால், இப்போது கடந்த ஆண்டில் திட்டமிடப்பட்டதை விட அதிகமாக 1,324 பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க  அரசு தீர்மானித்துள்ளது. அதாவது 1324 பள்ளிகளை மூடி விடுவார்களாம்; அவற்றில் படிக்கும் பத்துக்கும்  குறைவான மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் அதிகாரிகளே சேர்த்து விடுவார்களாம். இப்படி செய்வதற்கு பெயர் பள்ளிகளை மூடுவதில்லையாம்; மாறாக இணைப்பதாம்.  இத்தகைய வார்த்தை விளையாட்டுகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

1,324 பள்ளிகள் மூடப்படுவதற்கு கூறப்படும் காரணம் அவற்றில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் பயில்வது தான். இத்தகைய நிலை ஏற்படுவதற்கு அரசு தான் காரணம் என்பதை உணர மறுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர மறுப்பது தான் அவை மூடப்படுவதற்கு காரணம் என்றும், அந்தப் பள்ளிகளை மூடக்கூடாது என்று வாதிடும் அரசியல்கட்சித் தலைவர்கள் அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க யோசனைகளை  தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை விட அபத்தமான அணுகுமுறை இருக்க முடியாது.அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேராததற்கு அவர்களையோ, பெற்றோரையோ குறை கூறக் கூடாது.  

மாறாக ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே தான் குறை கூறிக் கொள்ள வேண்டும். தமிழகத்தில்  கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களிலும் ஒருவர் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் சென்று விடும் நிலையில், ஒற்றை ஆசிரியர் மட்டும் தான் 5 வகுப்புகளையும் கவனிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தரம் இருக்கிறதோ இல்லையோ, பெற்றோரைக் கவரும் வகையில் ஆடம்பரமான வசதிகள் இருக்கும் நிலையில் அரசு பள்ளிகளில் குறைந்தப்பட்ச வசதிகளாவது இல்லாவிட்டால் எந்த மாணவரும் சேர முன்வர மாட்டார்கள். அதை செய்யாமல் பள்ளிகளை மூடத் துடிப்பது செருப்புக்கு ஏற்றவாறு கால்களை வெட்டுவதற்கு சமமாகும். இது தனியார் பள்ளிகளுக்குத் தான் சாதகமாக அமையும் என கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,Dhammani Ramadoss , anbu Ramadoss, Report, Sample Schools, Student Number
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...