×

குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதில் நாமக்கல், சேலம் ஒப்பந்ததாரர்கள் மோதல்: உயர் அதிகாரிகள் மாயம்

நாமக்கல்: நாமக்கல் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நடந்த டெண்டரில் கலந்துகொள்ள வந்த சேலம் மாவட்ட ஒப்பந்ததாரர்களை, நாமக்கல் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் தடுத்ததால், இருதரப்பினர் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. நாமக்கல் பரமத்தி ரோட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில், மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள். இதையொட்டி குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்க மாவட்ட தலைவர் புள்ளியப்பன் தலைமையில் ஒப்பந்தகாரர்கள் சிலர் நேற்று காலை அலுவலகம் வந்தனர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த சில ஒப்பந்தகாரர்களும் வந்திருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் காரசாரமாக திட்டிக்கொண்டனர். அலுவலர்கள், இந்த மோதலை பார்த்து திகைத்து நின்றனர்.  தகவல் அறிந்த நாமக்கல் போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து ஒப்பந்தகாரர்கள் சங்க மாவட்ட தலைவர் புள்ளியப்பன் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு 6 வேலையும், சேலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு 5 வேலையும் என ஏற்கனவே பிரிக்கப்பட்டு விட்டது. தற்போது புதிதாக சிலர் டெண்டர் போட அடியாட்களுடன் வருகின்றனர் என்றார். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் கிருஷ்ணன் கூறுகையில், நாங்களும் குடிநீர் வடிகால் வாரியத்தில் முறைப்படி பதிவுசெய்து தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு வேலை கிடைக்க விடாமல், சிலர் தடுக்கிறார்கள். முறைப்படி  டெண்டர் போட வந்த எங்களை தடுக்கிறார்கள் என்றார்.

ஒப்பந்ததாரர்களின் மோதல் பற்றி அறிந்த, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று மாலை வரை அலுவலகம் வரவில்லை. இதுகுறித்து அங்கிருந்த அலுவலர்கள் கூறுகையில், மதியம் 3.30 மணியுடன் டெண்டர் விண்ணப்பங்கள் பெறுவது முடிந்துவிட்டது. இன்று டெண்டர் திறக்கப்பட்டு ஒர்க் ஆர்டர் அளிக்கப்படும் என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Namakkal ,Tender Draining Board ,Salem Contractors Confrontation , Namakkal, Salem , Tender Draining Board Office,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு