×

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மன்னர் கால தபால் பெட்டி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு பயன்படுத்தும் வகையில் மன்னர் கால தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வருகின்றனர். இவர்கள் பார்வையிட்டு பயன்படுத்தும் வகையில், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தபால் பெட்டியை கன்னியாகுமரியில் நிறுவும் பணி நடந்தது. இதற்காக கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பில் சன்னதி தெரு செல்லும் வழியில் பீடம் அமைத்து நிறுவப்பட்டுள்ளது.

இப்பணிகளை சப் கலெக்டர் பவன்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில், குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் மற்றும் இரணியல் என இரண்டு இடங்களில் தபால் பெட்டிகள் அமைக்கப்பட்டு இருந்தது.  அதில் மார்த்தாண்டம் குழித்துறை தபால் நிலையத்தில் இன்றும் அந்த தபால் பெட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரணியலில் இருந்த தபால் பெட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு பயன்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் பீடம் அமைத்து நிறுவப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் திறந்து வைப்பார்.

பழங்காலத்தை நினைவு கூறும் வகையில் இதனை பயன்படுத்தலாம். இங்கு போடப்படும் தபால்கள் உடனுக்குடன் எடுத்து அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின் போது, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், பேரூராட்சிகளின் உதவி பொறியாளர் பாண்டியராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், கன்னியாகுமரி விஏஓ பாலகிருஷ்ணன், இளநிலை உதவியாளர் சண்முக சுந்தரம், சுகாதார மேற்பார்வையாளர் நாராயணபாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் கன்னியாகுமரி பகுதியில் நடைபெறும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை சப்கலெக்டர் பார்வையிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tourist Visitor of Kanyakumari , Kanyakumari, Tourists, Post Box
× RELATED தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி...