×

பாகிஸ்தானை 5-0 என வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்

புவனேஸ்வர்: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் கிராஸ்ஓவர் சுற்றில், பாகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் பந்தாடிய பெல்ஜியம் அணி கால் இறுதிக்கு முன்னேறியது. லீக் சுற்றில் சி பிரிவில் இடம் பெற்றிருந்த பெல்ஜியம் அணி 2 வெற்றி, 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று இந்தியாவுடன் சமநிலை வகித்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் 2வது இடம் பிடித்தது. இந்திய அணி நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், பெல்ஜியம் கிராஸ்ஓவர் சுற்றில் நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடி கடும் நெருக்கடி கொடுத்த பெல்ஜியம் அணி அடுத்தடுத்து கோல் போட்டு பாகிஸ்தானை திணறடித்தது. முதல் பாதியில் 3-0 என முன்னிலை வகித்த அந்த அணி, இடைவேளைக்குப் பிறகும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. பெல்ஜியம் சார்பில் ராபி ஹெண்ட்ரிக்ஸ் (10வது நிமிடம்), தாமஸ் பிரையல்ஸ் (13’), டேனியல் சார்ளியர் (27’), செபாஸ்டியன் டாக்கியர் (35’), டாம் பூன் (53வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.

பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினர். பெல்ஜியம் அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
நேற்று நடந்த கடைசி கிராஸ்ஓவர் போட்டியில் நெதர்லாந்து - கனடா அணிகள் மோதின. இதில் அபாரமாக செயல்பட்ட நெதர்லாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் கனடாவை எளிதில் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் வான் டாம் 2 கோல் (40வது மற்றும் 58வது நிமிடம்), லார்ஸ் பாக் (16’), ராபர்ட் கெம்பர்மேன் (20’), தியரி பிரிங்க்மேன் (41வது நிமிடம்) தலா ஒரு கோல் போட்டனர். இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. நாளை மாலை 4.45க்கு தொடங்கும் 3வது கால் இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியின் சவாலை சந்திக்கிறது. அடுத்து இரவு 7.00 மணிக்கு தொடங்கும் 4வது மற்றும் கடைசி கால் இறுதியில் ஜெர்மனி - பெல்ஜியம் அணிகள் கைகலக்கின்றன.  15ம் தேதி அரை இறுதி ஆட்டங்களும், 16ம் தேதி 3வது இடத்துக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Belgium ,Pakistan ,quarter-finals , Belgium defeated Pakistan, 5-0, quarter-finals of Belgium
× RELATED பாகிஸ்தான் பயணம் ரத்து