தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவு

லண்டன்: லண்டனில் இருந்து இந்தியாவுக்கு தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு உத்தரவிட்டுள்ளது. மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா. இவருக்கு பல்வேறு தொழில்கள் உள்ளன. இந்நிலையில், பொதுத்துறை வங்கிகள் பலவற்றிலும் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பிச்  சென்றுவிட்டார். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்று பல அமைப்புகளும் அவர் மீது விசாரணை நடத்தி வழக்கு போட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை தேடப்பட்டு வரும்  குற்றவாளியாக அறிவித்தது. மேலும், இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. லண்டன் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக இந்திய புலனாய்வு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று லண்டன் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் லண்டன் புறப்பட்டுச் சென்றனர். இக்குழுவுக்கு சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமை வகித்து சென்றார். இந்நிலையில் லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக முடிவெடுக்க பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இந்த தீர்ப்பின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவுக்காக பாதுகாப்புமிக்க அறை ஒதுக்கீடு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லண்டன் நீதிமன்றம் நாடு கடத்த உத்தரவிட்டுவிடும் என்ற பயத்தில் வங்கிகளில் தான் கடன் வாங்கிய முழு தொகையையும் செலுத்தி விடுவதாக மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால், கடனுக்கான வட்டியை செலுத்த அவர் முன் வரவில்லை. இதனால் வங்கிகள் அதை பெற்றுக் கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை.ஆனால், தான் கடனை முழுமையாக திருப்பி செலுத்த முன்வந்துள்ள நிலையில், வங்கிகள் அதை பெற்றுக் கொள்ள வேண்டும் என மல்லையா வலியுறுத்தி உள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விஜய் மல்லையா, நீரவ் மோடியை நாடு...