×

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க சுகாதாரத்துறை செயலருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து சசிகலாவிடம் நேரில் விசாரணை செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், வரும் 17ம் தேதிக்குள் சுகாதாரத்துறை செயலர் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கஜா புயல் நிவாரணப் பணியில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருவதால் வரும் 17ம் தேதி வரை அவருக்கு அவகாசம் அளித்து அன்றைய தினம் ஆஜராக வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த 1 வருடத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உதவியாளர், கார் ஓட்டுநர், அவரது அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவன் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, சசிகலாவின் குடும்பத்தினர் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த 130 பேரும் அளித்த வாக்கு மூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தற்போது விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் அடுத்ததடுத்த வாரங்களில் முக்கியமான செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் உள்ளிட்டோரையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கையை ஆணையம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சுகாதாரத்துறை செயலர் தலைமையின் கீழ் தான் டாக்டர் பாலாஜி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த மருத்துவக்குழு ஜெயலலிதாவிற்கு தினசரி அளித்த சிகிக்சை பற்றி ராதாகிருஷ்ணனுக்கு விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரை விசாரிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது, சுகாதாரத்துறை செயலர் உத்தரவின் பேரிலேயே ஜெயலலிதாவிடம் இருந்து கைரேகையை வாங்கியதாக அரசு மருத்துவர் பாலாஜி கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாகவும், ஜெயலலிதா எப்படி அனுமதிக்கப்பட்டார் என்ற விவரங்கள் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்கவும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Arumugamasi Commission for Health Secretary ,Jayalalithaa , Jayalalithaa's death,Health Secretary,Radhakrishnan,Arumugamasi Commission
× RELATED குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட...