×

அந்நிய செலாவணி மோசடி வழக்கு : நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து சசிகலாவிற்கு விலக்கு

சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்.

வழக்கு கடந்த வந்த பாதை


ஜெ.ஜெ.டிவிக்கு அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தியதிலும், அதற்கு கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும், வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் வாங்கியதிலும், விதிகளை மீறி பல்வேறு வகையில் பல கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கத்துறை சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவையும் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சசிகலா தரப்போ உடல்நிலையும், வயதையும் காரணம் காட்டி ஆஜராகவில்லை. இதையடுத்து சசிகலா மீது பெங்களூரு சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.அப்போது சசிகலா நான் எந்த குற்றமும் செய்யவில்லை என் மீதான குற்றத்தை முழுவதும் மறுக்கிறேன் என்று கூறினார்.

சசிகலாவிற்கு பிடிவாரண்ட்


இந்த நிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்கு பின்னர் சசிகலா கையெழுத்திடவில்லை. மேலும் சசிகலா தரப்பும் சரியாக விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை.

எனவே மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். அதனால் சிறையில் இருக்கும் சசிகலாவை மறு குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 13ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி உத்தரவிட்டு. பிடி வாரன்ட்(சிறை மாற்றி அழைத்து வரும் வாரன்ட்) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய பாஸ்கரனிடம் கேள்வி கேட்பதற்காக வழக்கு 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து சசிகலாவிற்கு விலக்கு

இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலம் சசிகலா விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும் உத்தரவிட்டனர். மேலும் 4 மாதங்களில் சசிகலா, பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை முடிக்க எழும்பூர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sasikala ,court , Enforcement Department, Sasikala, Investigation, Egmore, Foreign exchange fraud, High Court
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!