×

உதயமார்த்தாண்டபுரத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் உருக்குலைந்த பறவைகள் சரணாலயம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்த பறவைகள் சரணாலயம் கஜா புயலின் கோர தாண்டவத்தால் தற்போது உருக்குலைந்து கிடக்கிறது. தமிழகத்தில் உள்ள இயற்கை பறவை சரணாலயங்களில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் 10க்கும் மேற்பட்ட சரணாலயங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் தொடங்கி சென்னை அருகே பழவேற்காடு மற்றும் வேடந்தாங்கல், மதுராந்தகம் அருகே கரிக்கிலி, அரியலூர் அருகே காரைவெட்டி, ராமநாதபுரம் அருகே சித்திரங்குடி, மேல்கீழ் செல்வனூர், கஞ்சிரங்குளம், திருநெல்வேலி அருகே கூந்தன்குளம், ஈரோடு அருகே வௌ;ளோடு, சிவகங்கை அருகே வேட்டங்குடி, நாகை அருகே கோடியக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பறவை சரணாலயங்கள் முக்கியமானதாகும்.

இவற்றோடு திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, உலகிலேயே அரிதான அலையாத்திகாடுகளும் பறவைகள் வந்து செல்லும் பிரதேசமாக பயனிலிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தால் சோலைவனமாக பசுமை கண்டிருந்த அலையாத்திகாடுகளையும் துவம்சம் செய்து, முத்துப்பேட்டையையும்  நாசம் செய்தது. இதில் இங்கு தமிழக சரணாலயங்களில் அரிதாக காணப்படும் கூழைக்கடா பறவை, துடுப்புவாயன், செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, சாம்பல் நாரை, வௌ்ளை அரிவாள் மூக்கன், சிறுதலை வாத்து, சிறவிகள், கொக்குகள், பவளக்கால் உல்லலான், மீன்கொத்திகள், நீர்க்கோழிகள் என பல்வேறு பறவையினங்களும் அலையாத்தி காடுகளுக்கு வலசை வந்து திரும்பின.

கனடா, ரஷ்யா, வடஅமெரிக்கா, சைபீரியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகைதரும் பறவையினங்கள், சீசன் காலம் வரையிலும் காட்டிலே தங்கி குடும்பம் நடத்தி, குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வாடிக்கை. இங்கு வரும் பறவைகள் பலவும் உதயமார்த்தாண்டபுரம் சரணாலய பகுதிக்கும் வந்து தங்கி திரும்புவதுண்டு. இதில் இந்த சரணாலயத்தில் உள்ள ஏரிக்கரையோர மரங்கள், ஏரி நடுவே நடப்பட்டுள்ள பல்வகை பழமரங்களை தங்குமிடமாக பயன்படுத்தி கூடுகட்டி கொட்டமடித்த பறவைகள், கஜா புயலில் சிக்கி ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன. அலையாத்திகாடுகளிலும் தங்கியிருந்த லட்சக்கணக்கான பறவைகள் தற்போதில்லை. கஜாவால் அனைத்தும் காலியாகி விட்டன.

இந்நிலையில் கஜா புயலடித்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஏரியை சுற்றி பராமரிக்கப்பட்டு வந்த மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்து கிடக்கின்றன.
உள்ளே சென்று பாதிப்புகளை கண்டு திரும்ப வழியின்றி பலவகை மரங்கள் நாலாபுறமும் சிதறி கிடக்கின்றன. இப்பகுதியிலிருந்த பெருமரங்கள் பலவும் கரை சீரமைப்பு எனும் பேரில் கடந்த ஜூன் மாதத்தில் வெட்டி அகற்றப்பட்டன. ஏரியின் நடுவேயிருந்த குளங்களில் பறவைகளுக்கு பிடித்தமான இரை மீன்களும் பிடிக்கப்பட்டன. இதனால் தங்குமிடம், உணவு பறிபோனதால் ஏமாற்றமடைந்த கணிசமாக பறவைகள், ஏரியை புறந்தள்ளி இடம் மாறிச்சென்றன. இதனால் இயற்கை சரணாலயம் உருமாறி விடுமோ என பறவை ஆர்வலர்களும் கவலை தெரிவித்திருந்தனர். ஆனாலும் சமீபத்தில் உதயமார்த்தாண்டபுரம் ஏரி ரூ.1.5 கோடி திட்ட மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஏரியின் வழங்கு வாய்க்கால் 11 கி.மீ தூர்வாரப்பட்டு தடுப்பு சுவர்களும் கட்டப்பட உள்ளன. ஏரியின் கரையை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு நீர்ஆதாரம் வரும் 2 மதகுகள் புதுப்பிக்கப்பட உள்ளன. ஏரி சீரமைப்புக்கு பிறகு ஆயிரத்து 20 ஏக்கர் விவசாய நிலம் நீர் ஆதாரம் பெற முடியும் எனவும் மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு பணிகளும் நடந்தது. இந்நிலையில் பேரிடராக வந்த கஜா புயல் உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்தை உண்டு இல்லை என்றாக்கி, உருக்குலைத்து விட்டது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறியது: சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மரங்கள் பலவும் புயலால் சாய்ந்து விட்டன. அவற்றை விரைவில் அகற்றி விட்டு புதிதாக மரக்கன்றுகள் விரைவில் நடப்படும். விவசாயிகளுக்கு உதவியாக தற்போது புயலில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்றார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bird Sanctuary ,Kasa Stormal Darasavam , Udayamardhandapuram, Ghaja Storm, Bird Sanctuary
× RELATED திடியூரில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்