×

தமிழக காவல் துறையில் பதவி உயர்வின்றி தவிக்கும் எஸ்எஸ்ஐகள்: நேரடி எஸ்.ஐ.க்கள் தேர்வால் அதிருப்தி

வேலூர்: தமிழக காவல் துறையில் தொடர்ந்து நேரடி எஸ்.ஐ.க்கள் தேர்வு நடைபெறுவதால் பல ஆண்டுகளாக பதவி உயர்வின்றி எஸ்.எஸ்.ஐக்கள் தவித்து வருவதாக வேதனை குரல்கள்  எழுந்துள்ளன.தமிழக காவல் துறையில் 2ம் நிலை போலீசாக பணியில் சேர்பவர், 10 ஆண்டுகள் தண்டனையின்றி பணியாற்ற வேண்டும். பின்னர் காவல்துறை சார்பில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றால்,  முதல் நிலை காவலராக நியமிக்கப்படுவர். அதன் பின்னர் மாவட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு, பணி மூப்பு அடிப்படையில் தலைமை காவலர் பதவி உயர்வு அளிக்கப்படும்.  அடுத்த 5 ஆண்டுகள் எவ்வித தண்டனையுமின்றி பணியாற்றினால், எஸ்ஐ பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது காவலர்கள் ஏட்டுகளாக பதவி உயர்வு பெற்றனர். இதனால் முதன்மை தலைமைக்காவலர்கள் அனைவரும் எஸ்.ஐ.க்களாக பதவி உயர்வு பெற்ற பின்  போதிய வயது இருப்பின் அவர்கள் இன்ஸ்பெக்டர்களாகவும், பதவி உயர்வு பெற வாய்ப்பாக அமைந்தது.

இந்நிலையில், கடந்த 1988ல் காவலர்களாக பணியில் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு எஸ்.எஸ்.ஐ.க்கள் என்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.  இதையடுத்து சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுத்து 6 மாத காலம் பயிற்சி அளிக்க வேண்டும். இதையடுத்து அவர்களுக்கு எஸ்ஐயாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால் கடந்த 4  முறையாக எஸ்எஸ்ஐகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல், நேரடியாக எஸ்.ஐ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 25 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி பதவி உயர்வு  கிடைக்கும் என்று காத்திருக்கும் எஸ்.எஸ்.ஐ.க்கள், பணி ஓய்வு பெறுவதற்கு முன்னர் எஸ்.ஐ., ஆகலாம் என்ற கனவு கனவாகவே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதில் தலையிட்டு பதவி  உயர்வுக்கு தகுதியான எஸ்.எஸ்.ஐ.க்களுக்கு எஸ்.ஐ. பயிற்சி அளித்து பதவி உயர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SIS ,Tamil Nadu Police Department: Disappointment , SSIs,promoted,Tamil Nadu,Police Department
× RELATED 19 டிஎஸ்பிக்கள், 429 எஸ்ஐக்கள் ஓராண்டு...