சென்னை: நடிகர் விஜயகுமார் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக அவரது மகள் நடிகை வனிதாவை மதுரவாயல் போலீசார் வெளியேற்றினர். மதுரவாயல், ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகர் 19வது தெருவில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. இந்த வீடு சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் விஜயகுமார் மகள் வனிதா இந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு முடிந்த பிறகும் அந்த வீட்டை காலி செய்யாததால் மதுரவாயல் போலீசிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நடிகர் விஜயகுமார் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர். அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் காலை தனது வழக்கறிஞர்களுடன் வந்த வனிதா வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று தனது மகளுடன் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று தனது வீட்டின் கண்காணிப்பு கேமரா, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக நடிகர் விஜயகுமார் தரப்பில் மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வனிதாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வனிதாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று மட்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வீட்டிற்குள் நுழைய அல்ல என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து வனிதாவை வீட்டில் இருந்து வெளியேற்றி போலீசார் கதவை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் போலீஸ் நிலையம்அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வனிதாவை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் பார்த்து கொள்வதாக கூறி விட்டு வனிதா சென்று விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டின் முன்பு தனியார் காவலாளிகள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
