×

ஜெ., சிகிச்சைக்கு பணம் வாங்கவில்லை என டாக்டர் மறுப்பு - மாறுபட்ட வாக்குமூலத்தால் குழப்பம்

சென்னை: அப்போலோ மருத்துவமனை சார்பில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க பணம் கொடுத்ததாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்க பணம் வாங்கவில்லை என்று டாக்டர் கிரிநாத் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 130க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்போலோ மருத்துவமனை சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனை இதய நோய் சிகிச்சை நிபுணர் கிரிநாத், டாக்டர் தர், விஜயசந்திர ரெட்டி ஆகியோர் நேற்று காலை 10 மணிக்கு ஆஜரானார்கள். அவர்களிடம்  ஆணைய வழக்கறிஞர் பார்த்தசாரதி விசாரணை நடத்தினார்.  அப்போது ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் முதலில் நீங்கள் எப்போது பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு, 27ம் தேதி அன்றுதான் முதலில் பார்த்தேன். அதுவும் கண்ணாடி வழியாக  பார்த்தேன். அதன்பிறகு மருத்துவ அறிக்கையை பார்த்துதான் கருத்து கூறினேன்.  நான் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்த குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் தொடர்ந்து அவரை சென்று பார்த்தேன் என்றார்.  

தினமும் சென்று பார்த்திருக்கிறீர்கள். அப்போலோ மருத்துவமனை சார்பில் சிகிச்சை அளித்ததற்கு நீங்கள் பணம் வாங்கினீர்களா? என்றபோது, பணம் எதுவும் வாங்கவில்லை என்றார். அப்போது ஆணையம் சார்பில் அப்போலோ மருத்துவமனையின் சார்பில் ஏற்கனவே ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ செலவுகள் குறித்து ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் டாக்டர் கிரிநாத்துக்கு ₹1 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளதே என்று கேட்டபோது, அதிர்ச்சியடைந்த அவர், நான் எந்த பணமும் வாங்கவில்லை. அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஆஜரான டாக்டர் கிரிநாத் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க பணம் வாங்கவில்லை என்று கூறுகிறார். ஆனால் அப்போலோ சார்பில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் செலவு செய்ததாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இதுபோன்று வேறு ஏதேனும் கணக்குகள் எழுதப்பட்டுள்ளதா? என்றும் ெஜயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது வேறு எதற்ெகல்லாம் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரிக்க விசாரணை செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆவணம் மற்றும் மருத்துவரின் மாறுபட்ட வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்சுக்கு சம்மன்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் அடுத்த வாரம் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நிலோபர் கபில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். இதற்காக ஆணையம் சார்பில் ஓரிருநாட்களில் சம்மன் அனுப்ப உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : J. , Apollo Hospital, Jayalalitha, money to pay
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. மாநில...