×

வணிக நகரில் வென்று வாகை சூடுவது யார்?

*தொகுதியை தக்க வைக்க திமுக வியூகம்*பாஜவுக்கு ஒதுக்கியதால் அதிமுக பாராமுகம்*தொகுதி ரவுண்ட் அப்விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் விருதுநகர் நகராட்சி, விருதுநகர், சிவகாசி ஒன்றிய கிராமங்கள் உள்ளன. விருதுநகர் தொகுதி, 1967ல் போட்டியிட்ட முதல்வர் காமராஜரையே தோல்வியடைய செய்த தொகுதி என்ற வரலாறு கொண்டது. விருதுநகர் நகராட்சி பகுதியில் நாடார் சமூகத்தினரும், ஒன்றிய கிராமங்களில் நாயக்கர் சமூகத்தினரும் அதிகம் உள்ளனர். மற்ற சமூகத்தினரோடு, முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஓட்டுகளும் 15 சதவீதம் வரை உள்ளது. 1,09,607 ஆண் வாக்காளர்கள், 1,14,674 பெண் வாக்காளர்கள், இதரர் 46 என மொத்தம் 2,24,327 வாக்காளர்கள் உள்ளனர்.திமுக அதிக வெற்றி… விருதுநகர் தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்த நிலையில், பருவமழை பொய்த்ததால் பட்டாசு, தீப்பெட்டி, கட்டிட தொழில்களுக்கு மக்கள் இடம் பெயர்ந்தனர். வணிகம், எண்ணெய், பருப்பு, மல்லி ஆலைகள், பாலிதீன், ஜின்னிங் ஆலை, நூற்பாலைகள் பிரதான தொழில்களாகி உள்ளன. 1971க்கு பிறகு நடந்த தேர்தல்களில் திமுக 4 முறை, அதிமுக, காங்கிரஸ் தலா 2 முறை, ஜனதா, தமாக, மதிமுக, தேமுதிக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.அதிமுகவினர் அதிர்ச்சி: விருதுநகர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனே மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியான பாஜ சார்பில் பாண்டுரங்கன் நிற்கிறார். வேறு கட்சியில் இருந்தவருக்கு, சேர்ந்த ஒரு மாதத்தில் பாஜ தலைமை சீட் வழங்கியதால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளே கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த முறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இத்தொகுதியில் நிற்பதாக பேச்சு நிலவியது. அவர் ராஜபாளையத்துக்கு மாறியதால், தொகுதியை பாஜவிற்கு அதிமுக தலைமை தாரை வார்த்து விட்டது. இதனால் விருதுநகர் தொகுதி தங்களுக்கே கிடைக்கும் என எண்ணியிருந்த அதிமுகவின் அடுத்தகட்ட முக்கிய நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது வரை அதில் இருந்து மீளவில்லை.மாறினார் மா.செ… எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக இருந்த தொழிலதிபர் கோகுலம் தங்கராஜ், அதிமுகவில் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். தொகுதி பாஜவுக்கு சென்றதால் அமமுகவில் இரவோடு இரவாக இணைந்து, காலையில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக, அமமுக, பாஜ, நாம் தமிழர், மநீம கூட்டணி சமக, சுயேச்சைகள் என 18 பேர் களத்தில் இருக்கின்றனர். எனினும், திமுக, அமமுக, பாஜவிற்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.திட்டப்பணிகள் ஏராளம்: சிட்டிங் எம்எல்ஏவான திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் கடந்த 5 ஆண்டுகளில், தொகுதியில் கிடப்பில் இருந்த ராமமூர்த்தி ரோடு மேம்பாலம், அல்லம்பட்டி ரயில்வே தரைப்பாலம் திட்டங்கள் நிறைவேற பாடுபட்டார். விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை நகராட்சிகளுக்கு ஒராண்டில் நிறைவேற உள்ள ரூ.504 கோடி மதிப்பிலான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தால், விருதுநகர் நகராட்சிக்கு தினசரி 90 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். தொகுதியிடம் நன்மதிப்பை பெற்றவர்.பட்டும் படாமல் பணி: பாஜ வேட்பாளர் பாண்டுரங்கனுக்கு விருதுநகர் பாஜ தரப்பினரே பட்டும், படாமல்தான் வேலை செய்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதிமுக தரப்பினரும் தொகுதி கைமாறிய அதிருப்தியில் ஒப்புக்கு வேலை செய்கின்றனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கும், சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கும் ஒதுக்கியதால் இரட்டை இலையில் நிற்க ஆள் இல்லையா என அதிமுக தரப்பு ஆதங்கத்தில் உள்ளது. பாஜ வேட்பாளரும் பிரசாரத்திற்கு யாரை அழைத்து செல்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். அதிமுக தரப்பில் ஒத்துழைப்பு இல்லை என பாஜ தரப்பினர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.பூத் கமிட்டிக்கே ஆள் இல்லை: பாஜ மாநில செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தாலும் அவராலும் அதிமுக, பாஜ தரப்பினரை இழுத்து செல்ல முடியாமல் தவிக்கும் நிலை தொடர்கிறது. பாஜ தரப்பில் அதிமுகவை அரவணைத்து செல்ல, நிர்வகிக்க, பூத் கமிட்டிக்கு ஆட்கள் இல்லை. வரும் ஒன்றிரண்டு அதிமுக நிர்வாகிகளும் தலைமை ஏதாவது சொல்லி விடுமோ என கட்சி அலுவலகம் வந்து செல்கின்றனர்.அமமுக வேட்பாளர்: வேட்பாளர் கோகுலம் தங்கராஜிற்கு அமமுக களம் புதிது என்பதால் அமமுக, தேமுதிக நிர்வாகிகளை இனம் கண்டுபிடிப்பதிலும், யாரை நம்புவது, யாரை ஒதுக்குவது என கண்டறிவதிலே கால விரயம் ஆகி வருகிறது. இரட்டை இலையுடன் பிரபலமான இவர், தற்போது குக்கரோடு வலம் வருகிறார். தொகுதியில் அமமுக, தேமுதிக கட்சியின் பலம் குறைவாகவே உள்ளது. மேலும், அதிமுகவில் இருந்தவர் என்ற முறையில் அதிமுக கூட்டணிக்கான வாக்குகள் சிதறி, அமமுகவுக்கு விழும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கடந்த முறையை விட இம்முறை திமுக வேட்பாளர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.திமுகவின் வாக்குறுதி: விருதுநகரில் லாரி நிறுத்தும் முனையம், விருதுநகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், ஒன்றியங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட குறைபாடுகளை சரி செய்து முழுமையான தண்ணீர் கிடைக்க ஏற்பாடு. கலை, சட்டக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி பணிகள் விரைவுபடுத்தப்படும். கவுசிகா ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கும் வகையில் விருதுநகரை சுற்றி உள்ள ஊராட்சிகளின் கழிவுநீரை நகராட்சி சுத்திகரிப்பு நிலையங்களில் இணைத்து சுத்திகரிப்பு செய்யப்படும் போன்றவை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது வாக்குகளை பெற்றுத்தரும் என்ற வெற்றி நம்பிக்கையுடன் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் களமாற்றுகின்றனர்.திமுக, அமமுக, பாஜ மும்முனை போட்டி என்றாலும் இரட்டை இலை களத்தில் இல்லை. அமமுகவால் அதிமுக ஓட்டுகள் பிரியும். 10 ஆண்டுகள் அதிமுக அரசு மீதான அதிப்தியால் திமுக இம்முறை பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக சமூக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்….

The post வணிக நகரில் வென்று வாகை சூடுவது யார்? appeared first on Dinakaran.

Tags : Kanjagar ,Baja ,Narudhunagar ,Assembly ,Virudhunagar Municipality ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...