×

போலி பெண் டாக்டர் வீட்டின் சீல் உடைத்து சோதனை சட்டவிரோதமாக 19,000 கருக்கலைப்பு : திருவண்ணாமலை கலெக்டர் பகீர் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பெண் சிசுக்களை கருவில் அழித்த ஆனந்தியின், வீட்டில் கலெக்டர், எஸ்.பி. சோதனை நடத்தினர். திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில், புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீட்டில், சட்டவிரோத கருக்கலைப்பு நடந்ததை, மருத்துவக் கண்காணிப்பு குழுவினர் கடந்த 1ம் தேதி நள்ளிரவு நடத்திய திடீர் சோதனையில் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் ஆனந்தி(51), அவரது கணவர் தமிழ்ச்செல்வன்(52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தியின் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்ட வீடு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்பி சிபிசக்ரவர்த்தி ஆகியோர் நேற்று இரவு 7.30 மணியளவில், ஆனந்தியின் வீட்டில் வைக்கப்பட்ட சீல் உடைத்து, சோதனை நடத்தினர். 2,400 சதுர அடி பரப்பளவில், லிப்ட் வசதியுடன் கூடிய 3 அடுக்கு மாடி கட்டிடத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தபோது, பதுங்கு குழிகள் போன்ற ரகசிய அறைகள் இருந்ததும், மாடியில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:

சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தி ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டவர். எனவே, அவருக்கு அதிகபட்ச  தண்டனை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு தொழிலில் ஆனந்தி ஈடுபட்டிருக்கிறார். சோதனை நடந்த அன்று மட்டும் 25 பேர் கருக்கலைப்புக்காக அப்பாய்ன்ட்மென்ட் பெற்றிருந்தனர். கடந்த 15 ஆண்டுகளில்  19 ஆயிரம் சிசுக்களை கருவிலேயே கலைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆனந்தியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 இடங்களில் உள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆனந்தி, அவரது கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகன் பெயரில் உள்ள 9 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.ஆனந்தியின் பெயரில் இரண்டு ஆதார் எண்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த மையத்துடன் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, இவரால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என முழுமையாக விசாரணை நடத்த, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர், டிஎஸ்பி ஆகியோர் உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : house ,doctor ,inspection ,Tiruvannamalai Collector , 19,000 abortions,fake female doctor's,breaking out of inspection,Tiruvannamalai Collector
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி