×

ராஜஸ்தான், தெலங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது 2 மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு

ஐதராபா: ராஜஸ்தான், தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த இரு மாநிலங்கள் மட்டுமின்றி, ஏற்கனவே ஓட்டுப்பதிவு நடந்த 3 மாநிலங்களிலும் சேர்த்து வரும் 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 6ம் தேதி அறிவித்தது. மிசோரம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கடந்த மாதம் 28ம் தேதியும்,  சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 12, 20ம் தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும், பாஜ.வும் தனித்து போட்டியிடுகின்றன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட 3 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. மொத்தம் 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் 1,777 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்தார். பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும், கட்சியின் தலைவர் அமித்ஷாவும் பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில், ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி ேவட்பாளர் லட்சுமண் சிங் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இத்தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. இதனால், 199 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 189 பேர் பெண்கள். சுயேச்சையாக 830 பேர் போட்டியிடுகின்றனர். இந்த மாநிலத்தில் மொத்தம் 4.77 கோடி  வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆளும் பாஜ.வுக்கும் காங்கிரசுக்கும் 130 தொகுதிகளில் நேரடியாக மோதல் நிலவுகிறது. இது தவிர பகுஜன் சமாஜ் சார்பில் 190 பேர் போட்டியிடுகின்றனர். சிபிஎம் 28 இடங்களிலும், சிபிஐ 16 இடங்களிலும் போட்டியிடுகின்றன. வாக்குப்பதிவுக்காக 51,965 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மாநிலத்திலும் பாஜ சார்பில் பிரதமர் மோடியும், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இங்கு பாஜ சார்பில் முதல்வர் வசுந்தரா, காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் சச்சின் பைலட், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றால் சச்சின் பைலட் அல்லது அசோக் கெலாட் முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் வசுந்தரா ராஜே ஜல்ரப்தான் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் பாஜ மத்திய அமைச்சர் ஜஷ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங் போட்டியிடுகிறார். இங்கு பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது. இரு மாநிலங்களிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 11ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் பகல் 12 மணிக்குள் முடிவுகள் தெரிய வரும், இந்த தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், இதன்  முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.


மாவட்ட எஸ்பி மாற்றம் தேர்தல் ஆணையம் அதிரடி
தெலங்கானாவில்  கடந்த செவ்வாய்க்கிழமை கொடங்கல்லில் முதல்வர் சந்திரசேகர ராவ் கூட்டம்  நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின்  மூத்த தலைவர்களில் ஒருவரான ரேவந்த் ரெட்டி பந்த் நடத்த அழைப்பு விடுத்தார். இதனால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ரேவந்த் ரெட்டியை விக்ரபாத் போலீசார் கைது செய்தனர். சந்திரசேகர ராவ் மக்களை சந்தித்த பிறகே அவரை போலீசார் விடுவித்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

இதையடுத்து, விக்ரபாத் மாவட்ட எஸ்பி அன்னபூர்னாவை தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக மாற்றியது.  அவருக்கு  பதில் புதிய எஸ்பி.யாக அவினாஷ் மொகந்தி நியமிக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajdhani ,Telangana , ராஜஸ்தான், தெலங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது 2 மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...