×

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு: 17ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டிடிவி.தினகரன் மீது டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக நேரில் ஆஜரான அவர், குற்றப்பதிவு நகல்களை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார்.  இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி டிடிவி.தினகரன், ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கர்நாடகாவை சேர்ந்த டிடிவி.தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் பல்வேறு மாநிலங்களை சார்ந்த ஹவாலா புரோக்கர்களை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரை தவிர டிடிவி.தினகரன் உட்பட மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கானது டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த மாதம் 17ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘இரட்டை இலை சின்னத்தைப்பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, பி.குமார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான முகாந்திரம் உள்ளது. எனவே, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை டிசம்பர் 4ம் தேதி பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தலாம்’ என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் டிடிவி.தினகரன் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.அதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி.தினகரனும் ஆஜரானார். இதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் முன்னிலையில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டு அதன் குற்றச்சாட்டு பதிவின் நகலை டிடிவி.தினகரன் பெற்றுக் கொண்டார். இதையடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் மனு
இரட்டை இலை வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘என் மீதான வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தொடரப்பட்டு உள்ளதால், அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ என மனுவில் அவர் கூறியுள்ளார். இதேப்போல், மல்லிகார்ஜுனா, பி.குமார் ஆகியோர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,TP , double leaf, Delhi CBI, Special Court,,recorded,adjournment
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...