×

சூளகிரியில் ஆக்கிரமிப்பால் நீர்வரத்தின்றி வறண்டு போன துரை ஏரி : இரை கிடைக்காமல் பறவைகள் தவிப்பு

சூளகிரி: சூளகிரியில், பிரசித்தி பெற்ற துரை ஏரி தண்ணீரின்றி வறண்டு விட்டதால், அங்கு இரைதேடி முகாமிட்டுள்ள பறவைகள் உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. சூளகிரியில் பிரசித்தி பெற்ற துரை ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டத்திற்கும் ஆதாரமாக விளங்கியது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், கால்வாய் வழியாக இந்த ஏரிக்கு கொண்டு வரப்படும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே கெலவரப்பள்ளி அணை நிரம்பி வழிந்தாலும், துரை ஏரிக்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை. தண்ணீர் எடுத்துவருவதில் முக்கிய பிரமுகர்கள் ஆர்வம் காட்டாதததால், துரை ஏரியில் தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஏரியில் கிடைக்கும் மீன் உள்ளிட்ட உயிரினங்களை உணவாக உட்கொள்வதற்காக அங்கு முகாமிட்டுள்ள பறவை இனங்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: துரை ஏரியை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி பணிகள் நடந்து வந்தது. சூளகிரி கீழ் தெரு, முஸ்லிம் தெரு, டேம் ரோடு, கேகே நகர், விஐபி நகர், மில்லத் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீராதாரமாகவும் விளங்கியது. ஆனால், சில ஆண்டுகளாகவே ஏரிக்கு தண்ணீர் வருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது.

ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய கிளை கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், நீர்வரத்து சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. இந்த ஏரியில் கிடைக்க கூடிய சிறிய மீன்களை உணவாக்கிக் கொள்ள உள்ளூர் பறவையினங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். நடப்பு சீசனையொட்டியும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் முகாமிட்டுள்ளன. ஆனால், ஏரியில் தண்ணீர் இல்லாமல், நாளுக்கு நாள் வறண்டு வருவதால் புகலிடம் தேடி வந்த பறவைகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன. பலத்த மழை பெய்து துரை ஏரிக்கு தண்ணீர் வந்தால் மட்டுமே, பறவைகள் மட்டுமின்றி சூளகிரி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lake ,Thurai ,invasions , Sulagiri, Thurai Lake, Birds
× RELATED சென்னை குடிநீருக்கு ஆதாரமான வீராணம் ஏரி வறண்டது