×

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்து இல்லாத சத்துணவு முட்டைகள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் மிகவும் தரமற்றதாகவும், சிறியதாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 198 அங்கன்வாடி மையங்களில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வாரத்திற்கு சுமார் என்பதாயிரம் முட்டைகள் வழங்கப்படுகிறது.

இந்த முட்டைகளில் பெரும்பாலானவை தற்போது தரமற்ற அழுகிய நிலையிலும், அளவில் மிகச் சிறியதாகவும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் இந்த முட்டைகள் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த வடிவேல் கூறுகையில், ‘சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் தற்போது அளவில் மிகச்சிறியதாக, அதாவது 15லிருந்து 20 கிராம் எடை கொண்ட அளவில் உள்ளது.

இது கோழி முட்டையா அல்லது வேறு ஏதேனும் முட்டையா என சந்தேகம் உள்ளது. திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் ஒரு மாதத்திற்கு சுமார் இரண்டு கோடிக்கும் மேல் முட்டைகள் விநியோகிக்கப்படுகிறது. இதில் முப்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் அளவில் மிகச்சிறியதாக உள்ளது. இதனால் பல லட்சம் அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து திருப்பரங்குன்ற ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school students , School, students, nutritional eggs
× RELATED அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 132 பேர் தேர்ச்சி