×

சித்தரேவு பெரும்பாறை மலைச்சாலையில் தொங்கும் பாறைகளால் நடுங்கும் வாகன ஓட்டிகள்

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு பெரும்பாறை மாலைச்சாலையில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு தொங்கும் பாறைகளால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.  சித்தரேவு பெரும்பாறை மலைச்சாலை 15 கிமீட்டர் தூரமுள்ளதாகும். பல ஆபத்தான பள்ளத்தாக்குகள், வளைவுகள் நிறைந்த இச்சாலை மிகவும் குறுகலாகவும் உள்ளது. இதனை அகலப்படுத்த கோரி பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த சாலையில் தான் தினந்தோறும் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கூலிதொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள் மற்றும் மலைப்பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் என பலர் பஸ், கார், லாரிகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.

இங்குள்ள தார்ரோடும் தரமின்றி போடப்பட்டதால் சில மாதங்களிலே மழை தண்ணீரால் அரிக்கப்பட்டு பள்ளங்களாகவும், மணல் மேவியும் காட்சியளிக்கின்றன. மேலும் இச்சாலையின் பல இடங்களில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பாறைகள் தொங்கி கொண்டு நிற்கின்றன. பலத்த மழை பெய்தால் இப்பாறைகள் ரோட்டில் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், ‘இந்த ரோடு சுமார் 40 மலை கிராமங்களை இணைக்கும் முக்கிய ரோடாகும். குறுகிய வளைவுகளில் எச்சரிக்கை பலகைகள் இல்லை. எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு தொங்கும் பாறைகளால் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. இப்பாறைகளை அகற்றினால் விபத்துகளை தடுப்பதுடன் ரோடும் அகலமாகும். மேலும் சாலையில் மழைநீரால் அரிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

கொடைக்கானலுக்கும் மாற்றுப்பாதை

வத்தலக்குண்டு கொடைக்கானல் வழித்தடம் மண்சரிவால் துண்டிக்கப்பட்டால் இந்த ரோடுதான் கொடைக்கானல் செல்ல மாற்றுப்பாதையாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் உள்ளது என வாகனஓட்டிகள் புலம்புகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sidarev Mudaliyar ,mountain bikers , Cittarevu, rock, motorists
× RELATED நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்