×

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 450 ஹெக்டேர் விவசாய நிலம் கையகப்படுத்த முடிவு: ஆட்சேபனை இருந்தால் 21 நாளில் தெரிவிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு

சென்னை: சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 450 ஹெக்டேர் விவசாய நிலங்களை கையகப்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சேலம் - சென்னை இடையே 277 கி.மீட்டர் தூரத்தில் 8 வழி பசுமை வழி விரைவுச்சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதில் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பதூர், செங்கல்பட்டு, உத்தரமேரூர் வழியாக சேலம் வரை செல்கிறது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீட்டர் தூரம் 8 வழிச்சாலை பயணிக்கிறது. இந்த சாலை அமைக்க விளை நிலமும், வனபகுதியும், 8 மலைகளும் அழிக்கப்பட இருந்தது. இதற்கு விவசாயகள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதை தொடர்ந்து சென்னை - சேலம் 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திட்ட மதிப்பீட்டில் ரூ10 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.7,210 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ெதாடங்கியுள்ளது. அதன்டி, காஞ்சிபுரம் மாவட்ட வழியாக செல்லும் 59 கி.மீ தூர நீள சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவற்கான அறிவிப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கிராமத்தின் பெயர், சர்வே எண் என்று அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, உத்திரமேரூர், செங்கல்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட கரசங்கால், ஒரத்தூர், படப்பை, சிறுவாஞ்சூர், துண்டல்கழனி, வடக்குபட்டு (அ), வளையங்கரணை, வடக்குப்பட்டு (ஆ), ஆப்பூர், சேந்தமங்கலம், பாலூர் (அ), பாலூர் (ஆ), பாலூர் (இ), சாத்தனஞ்சேரி, குருமஞ்சேரி, அரும்புலியூர், பழவேரி, சிறுதாமூர், சிறுமைலூர், படூர், மலையாங்குளம், காவாம்பயிர், செம்புலம், இருமரம், புத்தளி, புலிவாய், கன்னிகுளம், நெய்யாடுபாக்கம், கருவேப்பம்பூண்டி, ஓழுகரை, வெங்காரம், சிலாம்பாக்கம், அழிசூர், மேல்பாக்கம், அனுமந்தமண்டலம், இளநகர், பெருநகர் (அ), மானாம்பதி, விசூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் பெரும்பாலும் நன்செய், புன்செய் என மொத்தம் 450 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களை கையகப்படுத்த ஆட்சேபனை இருந்தால் 21 நாட்களுக்குள் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து மூலமாக தாக்கல் செய்யலாம். அவ்வாறு எழுத்துமூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கடிதம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : land ,Kancheepuram ,National Highways Commission , decision,acquire,450 hectares,land,Kancheepuram,Chennai-Salem,8 ways Green road project,National Highways Commission
× RELATED சென்னை விமான நிலையத்தில் புதிய பிளாசா...