×

ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் த்ரில் வெற்றி

சென்னை: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், பெங்கால் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தமிழக அணி, முதல் இன்னிங்சில் 263 ரன் குவித்தது. பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 74 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 141 ரன்னுக்கு சுருண்டது. 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்திருந்தது.

கை வசம் 8 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 129 ரன் தேவை என்ற நிலையில் கேப்டன் மனோஜ் திவாரி 13, கானி 1 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். தமிழக வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசி கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் பரபரப்பானது. திவாரி 18, கானி 25 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் சுதிப் சாட்டர்ஜி உறுதியுடன் போராட, அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் தமிழக அணியினர் உற்சாகம் அடைந்தனர்.  சுதிப் 40 ரன் (118 பந்து, 2 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். டிண்டா 1 ரன்னில் ரன் அவுட்டாக, கடைசி விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் பெங்கால் அணிக்கு 1 ரன் தேவைப்பட்டது. எனினும், பதற்றமின்றி விளையாடிய பிரமானிக் வெற்றியை வசப்படுத்தினார்.

பெங்கால் 82.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து வென்றது. பிரமானிக் 25 ரன் (97 பந்து, 1 சிக்சர்), போரெல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக பந்துவீச்சில் ரகில் ஷா 5, நடராஜன் 2, காந்தி 1 விக்கெட் வீழ்த்தினர். பெங்கால் தொடக்க வீரர் அபிஷேக் ராமன் ஆட்ட நாயகன் விருது பெற்றார் (98, 53). அந்த அணி 6 புள்ளிகளை தட்டிச் சென்றது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற பிறகும், வெற்றி வாய்ப்பை வீணடித்த தமிழக வீரர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : A wicket, a ball, wins
× RELATED டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி...