×

டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? செனாடமி, சி.பி.ஆர் சிகிச்சை குறித்து டாக்டர்கள் முரண்பட்ட வாக்குமூலம்

சென்னை: டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? செனாடமி, சி.பி.ஆர் சிகிச்சை குறித்து அப்போலோ டாக்டர்கள் முரண்பட்ட வாக்குமூலத்தால் விரிவான விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட போது அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அப்போது அவர்கள் மாரடைப்பு ஏற்பட்ட போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முரண்பட்ட தகவல்களை விசாரணையின் போது அளித்துள்ளனர். டாக்டர் ரமேஷ்வெங்கட்ராமன், ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது போது அவரது மார்பக பகுதியை அறுவை சிகிச்சை மூலம் பிளந்து செனாடமி இதயம் மசாஜ் செய்யப்பட்டது என்றும் அந்த சமயத்தில் மார்பகத்தின் மேல் பகுதியில் மசாஜ் செய்யும் சி.பி.ஆர். என்ற சிகிச்சை நிறுத்தப்பட்டது. செனாடமியும், சி.பி.ஆர். சிகிச்சையையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. செனாடமி மேற்கொள்வதற்கு 20 நிமிடங்கள் ஆனது என்று கூறியுள்ளார்.

ஆனால் டாக்டர் நரசிம்மன், செனாடமி என்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்ள 15 நிமிடங்கள் ஆனது என்றும், டாக்டர் சுந்தர், ஜெயலலிதாவுக்கு இதயம் செயல் இழந்ததும் சி.பி.ஆர். என்ற சிகிச்சை 45 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இதயம் துடிக்கவில்லை. எனவே, 10 நிமிடங்களில் செனாடமி மேற்கொள்ளப்பட்டது. செனாடமி மேற்கொள்ளும்போது சி.பி.ஆர். என்ற சிகிச்சையை அளிக்க முடியாது என்றும் கூறி உள்ளார். ஆனால் டாக்டர் மின்னல் ஓரா, ஒரே நேரத்தில் செனாடமி அறுவை சிகிச்சையும், சி.பி.ஆர். சிகிச்சையும் மாறி மாறி மேற்கொள்ளப்பட்டது. சி.பி.ஆர். சிகிச்சை அளித்தபோது சில நேரங்களில் செனாடமி அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டது. செனாடமி அறுவை சிகிச்சை செய்யும் போது சி.பி.ஆர். சிகிச்சை நிறுத்தப்பட்டது. செனாடமி சிகிச்சையை மேற்கொள்ள 30 நிமிடம் ஆனது என்று கூறியுள்ளனர். இந்நிலையில் டாக்டர் மதன்குமார், செனாடமி அறுவை சிகிச்சை செய்து இதயத்தை பார்க்க 10 நிமிடம் தான் ஆனது என்றும் செனாடமி செய்யும் போது சி.பி.ஆர். சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டது. சி.பி.ஆர். சிகிச்சை அளித்த போது செனாடமி அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டது. செனாடமி அறுவை சிகிச்சை செய்த போது சி.பி.ஆர். சிகிச்சை நிறுத்தப்பட்டது. இதுபோன்று மாறி மாறி 2 சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்த 30 நிமிடங்கள் ஆனது என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து பார்த்த போது, ஜெயலலிதா உடலை குளிர்ச்சி நிலையில் வைத்துள்ளனர். அப்போது அவர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எதுவும் சொல்ல முடியாது என்றும், எனவே, சாதாரண வெப்பநிலைக்கு உடலை கொண்டு வரும்படியும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி சாதாரண வெப்பநிலைக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின்பு தான் ஜெயலலிதாவின் இதயம் செயல்படவில்லை என்பதை உறுதி செய்து அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்து விட்டார் என்பதை எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவ்வாறு ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்போலோ டாக்டர்களின் முரண்பட்ட வாக்குமூலத்தால் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை வசதிகளின் விபரங்களை மருத்துவமனை குறித்து அறிக்கையை தாக்கல் நீதிபதி உத்தரவிட்டிருந்தாார். அதன்படி நேற்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர்  ஜெயந்தி தாக்கல் செய்தார். அப்போது 2016ம் ஆண்டு அரசு மருத்துவமனையில் இருந்த வசதிகள் குறித்த விபரங்களை ஆணையத்தில் சமர்பித்தார். அப்போது அவரிடம் எக்மோ கருவி பொருத்துவது, இதய பகுதிக்கு மசாஜ் செய்வது போன்ற சிகிச்சை தொடர்பாகவும், கேட்டகப்பட்டதாகவும் இது போன்ற சிகிச்சை அரசு மருத்துவமனையில் அளித்ததில்லை என்று ஆனால் தனக்கு தெரிந்தவற்றை விளக்கியதாக கூறியதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,Senator , What was the treatment , Jayalalithaa, Ddecember 4?
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...