×

வெம்பக்கோட்டை அணை நீர்மட்டம் 13 அடி உயர்வு : விவசாய பணிகள் தீவிரம்

சிவகாசி: வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் தற்போது 13 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளது. சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் வைப்பாற்று படுகை உள்ளது. வைப்பாற்று படுகையில் கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 7 மீட்டர் வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணை நீரை பயன்படுத்தி வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கரிசல்குளம், கோட்டைபட்டி, வெம்பக்கோட்டை, சல்வார்பட்டி, எரவார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் விவசாய பணிகள் நடைபெறுகிறது.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது. அணை நிரம்பி ஷட்டர் வழியாக திறக்கப்படும் நீர் வைப்பாற்று படுகை வழியாக சென்று இருக்கன்குடி அணைக்கு செல்லும். வெம்பக்கோட்டை அணையின் நீர்வரத்து பகுதியான சங்கரன்கோவில், செவல்பட்டி, ஆலங்குளம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இந்த மழையால் அணையில் நீர்மட்டம் 13 அடி வரை உயர்ந்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அணை பகுதிக்குள் அரசு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. செவல்பட்டி அருகே மணல் யார்டு அமைத்து ஆற்று மணலை அள்ளி வந்தனர். இதனால் அணையின் நீர்வரத்து பகுதியில் பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டதால் அணை பல ஆண்டுகளாக நிரம்பவில்லை. மழை நீர் முழுவதும் மணல் அள்ளிய பெரிய, பெரிய பள்ளங்களில் தேங்கி நின்றதால் அணை நிரம்புவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாய பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பியது. இதன் பின்னர் நிரம்பவில்லை. இதானல் விவசாய பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளது. அணையில் தற்போது 13 அடி வரை தண்ணீர் உள்ளது.

இதனால் அடுத்தடுத்து மழை பெய்து அணை நிரம்பும் என்ற நம்பிக்கையில் விவசாசயிகள் விவசாய பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். வெம்பக்கோட்டை அணையை சுற்றியுள்ள கன்டியாபுரம், வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சூரார்பட்டி, கோட்டைபட்டி போன்ற ஊர்களில் மானாவாரி நிலங்களில் நெல் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதுதவிர கிணற்று பாசனத்திலும் அணையை சுற்றியுள்ள நிலங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயி சாமிநாதன் கூறுகையில், ‘‘வெம்பக்கோட்டை அணை கடந்த 3 ஆண்டுகளாக முழு கொள்ளளவை எட்டவில்லை. இனால் விவசாய பணிகள் சரிவர நடைபெறவில்லை. இந்த ஆண்டு பருவமழை துவக்கத்திலேயே அணைக்கு நீர்வரத்து உள்ளதால் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம். பருவமழை தொடர்ந்து பெய்து அணை நிரம்பினால் இரண்டு போகம் நெல் சாகுபடி பணிகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vembukottai dam, water level, agricultural work
× RELATED வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை...