×

ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டும் அதிகாரிகள் மெத்தனத்தால் நிரம்பாத பச்சையாறு அணை

களக்காடு: ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டும் அதிகாரிகள் மெத்தனத்தால் பச்சையாறு அணை நிரம்பவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது 34 அடிக்கே தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை பகுதி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி. களக்காடு  நாங்குநேரி பகுதியில் உள்ள 115 குளங்கள் பச்சையாறு அணை மூலம் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் 10  ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

களக்காடு தலையணைக்கு கீழ் பகுதியில் தேங்காய் உருளி அருவி அருகில் இருந்து செல்லும் ஊட்டு கால்வாய் மூலம் பச்சையாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். பச்சையாறு அணைக்கு முக்கிய நீர்வரத்து இந்த கால்வாய்தான். இதுதவிர கீரைக்காரன் தொண்டு மலையடிவாரத்தில் பெய்யும் மழைநீரும் அணைக்கு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை மூன்று முறை மட்டுமே அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்புவதற்கு முன்பே தண்ணீர் திறப்பது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நம்பியாறு அணை உள்பட மாவட்டத்தில் உள்ள சில அணைகள் நிரம்பி வழிகின்றன. களக்காடு தலையணையிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டது. களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால், பச்சையாறு, உப்பாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதேபோல குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களிலும் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் களக்காடு பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி, ததும்புகின்றன. ஆனால் பச்சையாறு அணை இன்னமும் நிரம்பவில்லை. அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 34 அடியாகவே உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முருகன் கூறுகையில், ‘அணை நிரம்பாததற்கு போதிய மழை பெய்யாதது மற்றும் அதிகாரிகளின் மெத்தனமும் காரணமாகும். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையினால் பெருக்கெடுத்த வெள்ளநீரை அணைக்கு திறந்து விடாததால், வெள்ளம் ஆறுகளில் சென்று வீணாகி விட்டது’என்றார். அணை நிரம்ப இன்னும் 16 அடிக்கு தண்ணீர் தேவை. தற்போது அணைக்கு நீர்வரத்தும் இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pachaiyar Dam ,rivers , River, flood, pachaiyar dam
× RELATED அய்யாகண்ணு வீட்டுக் காவலில் சிறைவைப்பு!!