×

புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டு தொகையை அரசே செலுத்த வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கான கெடுநாள் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. கூட்டுறவு அமைப்புகளில் கடன் பெறுவதற்கான வாய்ப்புள்ள விவசாயிகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளில் பெரும்பாலோர் இத்திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டாத நிலை உள்ளது. 2017ம் ஆண்டு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை தள்ளுபடி செய்யாமல் நீண்டகால கடனாக மாற்றி அமைக்கப்பட்டது.

இதனால் இவ்வாண்டு விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்பதனை மாற்றி கால நீடிப்பு செய்வதுடன், கஜா புயலால் மிகக் கடுமையான முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் காப்பீட்டுத் தொகையினை அரசே பொறுப்பேற்று விவசாயிகளுக்காக செலுத்தி, விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் சென்ற ஆண்டு பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் உள்ளதை அரசு கவனத்தில் கொண்டு, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டு தொகையை உடனடியாக பெற்று விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Muthrasan , GAJA storm, government, crop insurance, farmers,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை