×

விஸ்வரூபம் எடுத்துள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது பற்றி விவாதிக்க கூட்டம் நடைபெற உள்ளது.  

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை


தனது மாநிலத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. தமிழக எல்லைக்கு அருகே கட்ட திட்டமிட்டுள்ள அணையின் மூலம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும், 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் அது முடிவு செய்துள்ளது. இந்த அணை திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இதை பொருட்படுத்தாமல், புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

 மத்திய அரசு அனுமதியும் தமிழக அரசு எதிர்ப்பும்  

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள, கர்நாடகா அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அசுர வேகத்தில் ஆய்வு பணிகளை செய்து முடித்த கர்நாடக அரசு, அணைக்கான முதல் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

இதற்கு அனுமதி வழங்குவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று அதிரடியாக அறிவித்தது. இதனால், மேகதாது அணை திட்டத்தில் கர்நாடக அரசு மீண்டும் வேகம் எடுப்பது உறுதியாகி விட்டது. புதிய அணை கட்டும் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசும், தமிழக கட்சித் தலைவர்களும், விவசாய சங்கங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்


மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேகதாது திட்டம் தமிழக விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. திமுக கூட்டணி, தோழமைக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இதில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதனிடையே மேகதாது அணை பற்றி ஆலோசிக்க டிச.6-ம் தேதி கர்நாடகாவில் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து முன்னாள் முதல்வர்களும் கூட்டத்தில் பங்கேற்க குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நீர்வளத்துறை முன்னாள் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்க குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party meeting ,DMK ,Meghatadu , All party meeting on behalf of DMK to discuss the issue of the Meghatadu dam issue
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்