×

ஆலந்தூர் வார்டுகளில் சொத்துவரி உயர்வை எதிர்த்து வழக்கு

சென்னை: ஆலந்தூர் நகராட்சியில் சொத்து வரி மாற்றத்திற்கு முன்பு வணிக நிறுவனங்கள் உள்ள சொத்துக்களுக்கான வரி பாக்கி பட்டியலை தாக்கல் செய்யுமாறு வழக்கு தொடர்ந்த ஆலந்தூர் நகராட்சியின் முன்னாள் தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளரும் ஆலந்தூர் நகராட்சி முன்னாள் தலைவருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆலந்தூர் நகராட்சி கடந்த 2011ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சியானது. தற்போது, ஆலந்தூரில் 161 முதல் 167 வரை வார்டுகள் உள்ளன. இந்நிலையில், ஆலந்தூரில் உள்ள வார்டுகளில் வீடுகளுக்கும், வீடுகள் அல்லாத சொத்துக்களுக்கும் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்துமாறு கடந்த ஜூலை 26ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை உத்தரவிட்டது.

சாலை ஓரத்தில் உள்ள வீடுகளுக்கு ஒரு சதுர அடிக்கு 3.75ம், தெருக்களில் உள்ள வீடுகளுக்கு சதுர அடிக்கு 2.50ம் சொத்து வரி வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் ராதாகிருஷ்ணன் சாலை, லஸ் சர்ச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சதுர அடிக்கு 1.50 மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலந்தூரில் உள்ள வார்டுகளில் வீடுகளுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. எனவே, ஆலந்தூர் பகுதியில் சொத்து வரியை உயர்த்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், வரி மாற்றத்திற்கு முன்பு ஆலந்தூர் பகுதிகளில் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் சொத்துகளின் பட்டியலைத் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : wards ,Alleppey , Case against Alleppey wards, welfare case
× RELATED திருவாரூரில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்