×

மாநில உரிமைகளை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார். இதுகுறித்து அவர் வௌியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:அணைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் முந்தைய ஐக்கிய முற்போக்கு  கூட்டணி ஆட்சியிலேயே தொடங்கி விட்டன. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அந்த சட்ட முன்வரைவை கைவிடுவதாக அறிவித்தது. 2014ம் ஆண்டில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மீண்டும் அணைகள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கிறது.

இத்தகைய சட்டம் இந்தியாவுக்கு தேவையற்றது என்று கூறி பாமக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த ஜூன் 13ம் தேதி புதுடெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு பிறகும் தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட்டன. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி,  கடந்த ஜூன் 26ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழகத்தின் இத்தகைய உணர்வுகளை மதிக்காமல் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றியே  தீர வேண்டும் என்று மத்திய அரசு துடிப்பது சர்வாதிகாரம் ஆகும். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

ஒரு மாநிலத்தில் ஓர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை அந்த மாநிலத்திற்கே சொந்தமானது. அவற்றை பராமரிக்கும் அதிகாரமும், உரிமையும் அணை அமைந்திருக்கும் மாநிலத்திற்கே சொந்தமானது என இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் முல்லைப் பெரியாறு மீதான தமிழகத்தின் உரிமை முற்றிலுமாக பறிக்கப்பட்டு விடும்.
 
அதுமட்டுமின்றி, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய மேலும்   3 அணைகளை பராமரிக்கும் அதிகாரமும் கேரளத்துக்கு தாரை வார்க்கப்படும். அதனால் மத்திய அரசு இத்தகைய சட்ட முன்வரைவை திணிக்கக் கூடாது. உடனடியாக இந்த முன்வரைவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,state ,DMRC , Central government,anbumani
× RELATED திருவையாறில் அரசு திட்டப்பணிகள் மாநில திட்டக்குழு துணைத் தலைவா் ஆய்வு