×

சபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரஹ்னா பாத்திமா கைது: மத உணர்வை புண்படுத்தியதால் நடவடிக்கை

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய கேரள மாடல் அழகி ரஹ்னா  பாத்திமா மத உணர்வை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது  செய்யப்பட்டார். சபரிமலையில் இளம்பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற  உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கொச்சியை சேர்ந்த மாடல் அழகியும்,  பிஎஸ்என்எல் ஊழியருமான ரஹ்னா பாத்திமா கடந்த மாதம் சபரிமலை செல்வதற்காக  வந்தார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சன்னிதானத்திற்கு அழைத்து  சென்றனர். ஆனால், இதுகுறித்து அறிந்ததும் சபரிமலையில் பக்தர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சன்னிதானத்தில் இளம்பெண்கள்  வந்தால் கோயில் நடையை மூடி விடுவேன் என்று தந்திரி கண்டரர் ராஜீவரர்  கூறினார். இதையடுத்து போலீசார் ரஹ்னா பாத்திமாவை திரும்ப அழைத்து சென்றனர்.  இதற்கிடையே ரஹ்னா பாத்திமா தனது பேஸ்புக்கில் சபரிமலை பக்தர்கள் விரதக்  காலத்தில் அணியும் கருப்பு ஆடையும், துளசிமணி மாலையும் அணிந்து உடல்  பாகங்கள் தெரியும் விதத்தில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இது  மத உணர்வை புண்படுத்துவதால் ரஹ்னா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்ய  வேண்டுமென கூறி பத்தனம்திட்டாவைச் சேர்ந்த பாஜ தலைவர் ராதாகிருஷ்ண மேனன்  என்பவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து ரஹ்னா  பாத்திமா மீது 295 (ஏ) என்ற ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில்  வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார்  இறங்கினர்.

இதையடுத்து முன்ஜாமின் கோரி ரஹ்னா பாத்திமா கேரள உயர்  நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வாரம் தள்ளுபடி  செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்  தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று மதியம்  கொச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வைத்து பத்தனம்திட்டா போலீசார்  ரஹ்னா பாத்திமாவை கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணைக்காக பத்தனம்திட்டா  கொண்டு சென்றனர். ரஹ்னா பாத்திமாவை கொண்டு வர உள்ளதை அறிந்து காவல்  நிலையம் முன் ஏராளமானோர் திரண்டனர். ரஹ்னா பாத்திமா வந்ததும் அவரை பார்த்து  அங்கு திரண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது, ரஹ்னா பாத்திமா  நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒரு பெண்ணின் காலை பார்த்தாலே மத உணர்வு புண்பட்டு விடுமா? இதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த கலாச்சாரத்தை  வெளிப்படுத்தி உள்ளனர். ஒரு பெண்ணின் காலை பார்த்தால் பிரம்மச்சரியம்  கெட்டுபோய்விடும் என்பதை இதன் மூலம் ஒப்புக் ெகாண்டுள்ளனர்’’ என்றார். ரஹ்னா  பாத்திமா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் அவரை  சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர் கொச்சி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெக்னீஷியனாக  பணிபுரிந்து வருகிறார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafa Fatima ,Sabarimala , Sabarimala, Model Rehena Fathima, arrested,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு