×

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனின் திறமைகளை தமிழகம் முழுமையாக பயன்படுத்தவில்லை : ராமதாஸ் இரங்கல்

சென்னை: தொல்லியல் துறை ஆய்வுகள் மூலம் பல்வேறு உண்மைகளை வெளியுலகிற்கு கொண்டு வந்த தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று காலமானார். 88 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னை பெசன்ட்நகரில் உள்ள  மின் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது. ஐராவதத்தின் மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமாதஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழறிஞர் ஐராவதம் அவர்களின் மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

ஐராவதம் மகாதேவன் எளிமையானவர், பொறுமையானவர், பொறுப்பானவர். அவர் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் முத்திரைப் பதித்தவர். தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வுகளில் மூலம் சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளுக்கும், தமிழ் எழுத்துகளுக்கும் ஒற்றுமை இருப்பதை சங்ககால இலக்கியங்களின் துணையுடன் நிரூபித்து சிந்து சமவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டுக் காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரிகம் என்பதை நிறுவியவர். பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டவர்.


கல்வெட்டுக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை இவர் மேற்கொண்டுள்ளார். சிந்துவெளி ஆய்வு குறித்த இவரது கட்டுரை மிகுந்த பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு கால ஆய்வுக்குப் பின்பு, சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவை என்பது அவரது கருத்தாகும். தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் 1987-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை தினமணி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர் ஆவார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது 2009-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐராவதம் மகாதேவனிடம் புதைந்து கிடந்த திறமைகளை தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரது மறைவு தமிழுக்கும், தொல்லியல் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Iravatham Mahadeva ,Tamil Nadu ,Ramadoss , Archaeological field studies, iravatham mahadevan, mourning, Ramadoss
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...