×

வேலூர் அருகே மலையடிவாரத்தில் சாராயம் விற்பனை படுஜோர் : போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்

வேலூர்: வேலூர் அருகே மலையடிவாரத்தில் சாராயம் விற்பனை படுஜோராக நடக்கிறது. இதனால், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட குருவராஜபாளையம் லட்சுகான் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதையொட்டி சுப்புநாயுடுபாளையம், மராட்டிப்பாளையம், பாலப்பாடி, குப்பம்பட்டு, ராமநாயணி குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், லட்சுகான் மலையடிவாரத்தில் கடந்த பல மாதங்களாக சாராயம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மலைப்பகுதிகளிலேயே ஊறல்கள் போடும் சாராய வியாபாரிகள், காய்ச்சி விற்பனை செய்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபோன்று, தினமும் 300 லிட்டருக்கும் அதிகமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு பாக்கெட் 20க்கு விற்பனை செய்வதால், அதிகாலை 4 மணிக்கே குடிமகன்கள் சாராயம் வாங்குவதற்காக வந்து விடுகின்றனராம். இங்குள்ள மலையடிவார பாறை அருகில் குடிமகன்கள் வீசி செல்லும் சாராய பாக்கெட்டுகளுக்கு வியாபாரிகள் தினமும் தீ வைத்து விடுகின்றனர்.

இவ்வாறு தீ வைப்பதால் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறலும் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது, அப்பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் காலி சாராய பாக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு கள்ளச்சாராய வியாபாரிகள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தினமும் 7 ஆயிரம் வரை மாமூல் கொடுப்பதாகவும், அதனால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கள்ளச்சாராய வியாபாரிகள் கூறுவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதற்கேற்ப சாராய விற்பனை குறித்து தகவல்  கொடுப்பவர்களை, சாராய வியாபாரிகளிடம் போலீசாரே காட்டி கொடுக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறியதாவது: லட்சுகான் கிராம மலையடிவாரத்தில் நாளுக்கு நாள் சாராயம் விற்பனை அதிகரித்து கொண்டே செல்கிறது. 20 க்கு பாக்கெட் சாராயம் விற்பனை செய்வதால், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக போதைக்கு அடிமையாகிவிட்டனர். மேலும் தண்ணீர் கலப்படம் செய்துவிடுவார்கள் என்று, சாராயம் காய்ச்சும் இடத்திலேயே ஏராளமானோர் காத்திருந்து சுடச்சுட கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர். இதனால் எங்கள் கிராம பெண்களின் தாலி உட்பட நகைகள் சாராய ஆசாமிகளிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதுடன், ஆண்களின் உடல் நலன் கெடுகிறது.

கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலன் குன்றி அடுத்தடுத்து சிலர் பலியாகியுள்ளனர். ஆனால், இயற்கை மரணம் என்று கூறி எரித்துவிடுகின்றனர். எனவே, எங்கள் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக் கோரி கலெக்டர், எஸ்பி ஆகியோருக்கு கிராம மக்கள் சார்பில் புகார் கடிதம் அனுப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதேநிலை நீடித்தால், சுமார் 7 கிராமங்களை சேர்ந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, காவல்துறை வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு நேர்மையான அதிகாரிகளை, போலீசாரையும் நியமித்து கள்ளச்சாராய பேர்வழிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் எங்கள் கிராமங்களில் போதைக்கு அடிமையான இளைஞர்களை சீர்திருத்த மறுவாழ்வு மையம் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore ,slave , Vellore, wine, young
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...