×

திருமயம், அரிமளம் பகுதியில் 9 நாட்களாக இருளில் தத்தளிக்கும் கிராமங்கள்

திருமயம்: திருமயம், அரிமளத்தில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் ஓரளவு முடிந்த நிலையில் கிராம பகுதிகளில் மின்சாரம் இல்லாததால், பெண்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் தினும் அவதிப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதி மக்கள் கடந்த வாரம் தாக்கிய கஜா புயலில் தங்களது உடைமைகளை இழந்து நின்றனர். அப்பகுதியில் அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் ஓரிரு போக்குவரத்து சரிசெய்யப்பட்டநிலையில், மின்சாரம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. காரணம் அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தது.

இதனால் அரிமளம், திருமயத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் இருளில் மூழ்கியது. இதனையடுத்து மின்துறையினரின் நடவடிக்கையால் முதலில் திருமயத்திற்கும் அதனை தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் புயல் பாதித்து 9 நாட்கள் ஆனநிலையில் இன்றளவும் பெரும் பாலான கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் தத்தளிக்கிறது. இதனால் கிராமமக்கள் எண்ணெய் விளக்குகளை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மேலும் மின்சாரவசதி இல்லாததால் குடிநீர்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அதிகாரிகள் ஜெனரேட்டர் உதவியுடன்  குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆனால் ஜெனரேட்டர் பற்றாக்குறையால் அனைத்து கிராமமக்களின் குடிநீர் தேவையை தொடர்ந்து பூர்த் செய்ய அதிகாரிகளால் முடியவில்லை. இதனால் பெரும்பாலான கிராமமக்கள் கண்மாய், ஊரணி, ஊற்றுநீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே மின்சாரதுறையினர் நடவடிக்கையால் சேதமடைந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு ஒவ்வொரு பகுதியாக மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமயம், அரிமளம் பகுதியில் ஒருசில இடங்களில் மின் வினியோகம் வழங்ககோரி அவ்வப்போது சாலைமறியல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள், தன்னார்வலர்கள் புயலால் பாதிக்கப்பட்ட ஒருசிலருக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர். தற்போது புயலால் பாதிக்கப்பட்ட அரிமளம், திருமயம் பகுதியை சுற்றியுள்ள கிராமமக்களின் முக்கிய கோரிக்கையாக மின்சார தேவை உள்ளது.எனவே அதிகாரிகள் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : villages ,Thirumayam ,Arumalam , Thirumayam, Arimalam, Villages
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...