×

பம்மல் நகராட்சியில் சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பணி: தனியார் நிறுவனங்கள் அடாவடி

பல்லாவரம்: பம்மல் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து தனியார் நிறுவனங்கள் கட்டுமான பணியில் ஈடுபடுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட சங்கர் நகர், 2வது குறுக்கு தெருவில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த இந்த சாலையை முற்றிலும் ஆக்கிரமித்து தனியார் சிலர் கான்கிரீட் கலவை  இயந்திரங்களை வைத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழியே பொதுமக்கள் செல்வதை தடுக்க, சவுக்கு கட்டைகளை சாலையின் குறுக்கே போட்டு தடை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், இப்பகுதி மக்கள்  தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், மீண்டும் பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பம்மல் அனகாபுத்தூர் பகுதிகளில் சமீப காலமாக சிலர் முறையான அனுமதி பெறாமல், சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும்  அபாயம் உள்ளது. கடந்த 20ம் தேதி அனகாபுத்தூர் 4வது பிரதான சாலையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணியால், மின் விபத்து ஏற்பட்டு விழுப்புரத்தை சேர்ந்த செல்வி (26)  என்பவர் இறந்தார். மணிகண்டன் (25), பரசுராமன் (28) என்ற தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அதன் பிறகு கூட கட்டுமான பணியில் ஈடுபடுவோரை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்காமல் மெத்தனமாக உள்ளனர். இவ்வாறு போதிய பாதுகாப்பு  வசதியின்றி, சாலையை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமான பணியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,companies , Road, Pumal municipality,work, Private companies
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...