×

குருநானக் சமாதி பாதை அடிக்கல் நாட்டு விழா பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார் அமரீந்தர்

சண்டிகர்: பாகிஸ்தானின் கர்தார்பூரில் சிறப்பு பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் விடுத்த அழைப்பை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நிராகரித்துள்ள நிலையில், அம்மாநில  அமைச்சர் நவ்ஜோத் சித்து ஏற்றுக் கொண்டுள்ளார். சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானின் சர்வதேச எல்லையையொட்டி ரவி நதிக்கரையில் அமைந்துள்ளது.  இங்கு சென்று வருவதை சீக்கியர்கள் புனிதமாக கருதுகின்றனர்.  குருநானக்கின் 549வது  பிறந்த ஆண்டை முன்னிட்டு பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபாநானக் நகரில் இருந்து சர்வதேச எல்லை வரை சிறப்பு பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல், பாகிஸ்தான் எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை சாலை அமைப்பதற்கு அந்த நாடும் முன்வந்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை மறுநாள் கர்தார்பூரில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்கிறார். இதில் கலந்து கொள்ளுமாறு பஞ்சாப்  முதல்வர் அமரீந்தர் சிங், அமைச்சர் நவ்ஜோத் சிங் ஆகியோருக்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை சார்பில் கடந்த 24ம்  தேதி அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த அழைப்பை முதல்வர் அமரீந்தர் சிங் நிரகாரித்துள்ளார். அதே நேரத்தில் அமைச்சர் சித்து பாகிஸ்தானின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷிக்கு, அமரீந்தர் சிங் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் படையினரால் கொல்லப்படும்  சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால், உங்கள் விழாவில் பங்கேற்க முடியவில்லை’’ என்று கூறியுள்ளார். ஆனால், அமைச்சர் சித்து எழுதிய கடிதத்தில், ‘‘28ம் தேதி கர்தார்பூரில் நடக்கும் விழாவில் கலந்து  கொள்வதற்கான உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amarinder ,Pakistan , Gurunakan Samadhi , foundation stone, temple Pakistan , Rejected Amarinder
× RELATED வேட்பாளரின் பிரசாரத்திற்கு...