×

முதுகெலும்பு இல்லாதவர் முதல்வர் எடப்பாடி: வைகோ காட்டம்

சென்னை: முதுகெலும்பு இல்லாதவராகவே தமிழக முதல்வர் இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 2009ம் ஆண்டு நடந்தது. அப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது ஆயிரம்விளக்கு போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்தனர்.  இதுதொடர்பாக, சென்னை சிங்காரவேலன் மாளிகையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று காலை வைகோ ஆஜரானார். அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  கஜா புயல் தாக்குதலில் தமிழக வரலாற்றில் 60 ஆண்டுகள் இல்லாத அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயல் பற்றி தகவல் வந்தபோது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்தது. அப்படி இருந்தும் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.

குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், முதல்வர் பாதிப்புக்குள்ளான இடத்திற்கு சென்று முகாம் அமைத்து செயல்படவில்லை. முதல்வர் தனது பணியில் இருந்து தவறிவிட்டார். பிரதமர் மோடி புயல் பாதித்த பகுதிகளுக்கு ஏன் வரவில்லை. அவரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வரை சந்திக்க பிரதமர் நேரம் தராமல் ஏன் காலம் தாழ்த்தினார்?

முதுகெலும்பு இல்லாதவராகவே தமிழக முதல்வர் இருக்கிறார். மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிவாரணத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் நிவாரணம் தருவார்கள். விவசாயிகள் தற்கொலைக்கு தமிழக அரசுதான் காரணம். மேலும், வரும் 25, 26 மற்றும் 27ம் தேதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று மதிமுக சார்பில் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட உள்ளோம். இதுவரை 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை நிவாரணமாக வழங்கியுள்ளோம். புயலால், ₹25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi ,Vaikom Cottam , Edappadi, Vaikom
× RELATED காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: எடப்பாடி கோரிக்கை