×

மத்தியஅரசு நிவாரண நிதி மறுப்பதை திசை திருப்ப வன்முறையை தூண்டுகிறார் மத்திய அமைச்சர் : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கஜா புயல் காரணமாக மக்கள் குடிநீருக்கும், உணவுக்கும், மின்சாரத்திற்கும் வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பொருளாகவும், பணமாகவும் நேரடி நிவாரணப்பணிகளிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு உடனடியாக செல்லவில்லை.
புயல் சேத பிரச்னையில் மத்திய அரசின் பாராமுகத்தை திசை திருப்புவதற்காக மத்திய அமைச்சர் பக்தர் வேடத்தில் சபரிமலைக்குச் சென்று அங்கு அவர் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜ முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அமைச்சர், மாநிலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல திசை திருப்பும் முயற்சியிலும், வன்முறையை தூண்டுவதிலும் ஈடுபட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய அமைச்சர் என்கிற பொறுப்புணர்வோடு செயல்பட்டு இனிமேலாவது தமிழக மக்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற மத்திய அரசை வலியுறுத்தவும், மார்த்தாண்டம் மேம்பாலத்தை சரி செய்யவுமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே அவரது கடமையாகும்.  மாறாக, தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் மத்திய அமைச்சரின் நடவடிக்கைகள் எதிர்விளைவுகளையே உருவாக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : K.Balakrishnan ,Central , Central minister urges ,violence,divert attention from refinance, K.Balakrishnan is condemned
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...