×

கஜா புயல் சேதங்களை ஆய்வு செய்ய சென்னை வந்தடைந்தது மத்திய குழு

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்திவிட்டு நாளை முதல் 3 நாள் நேரடியாக பாதிக்கப்பட்ட  இடங்களை ஆய்வு செய்கின்றனர். அவர்கள் அறிக்கை அளித்த பிறகுதான் மத்திய அரசு நிவாரண உதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வங்கக்கடலில் உருவான `கஜா’’ புயல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது 120 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. இதுதவிர, சாலை ஓரங்களில் உள்ள பல லட்சம் மரங்கள் முறிந்தும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளன. ஓட்டு வீடுகள், குடிசைகள் என்று 3.5 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 33 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் சேதம் அடைந்துள்ளது.

புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும், இன்னும் சில இடங்களுக்கு நிவாரண உதவியே கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான நிதியை கேட்டு பெற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கஜா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை புள்ளி விவரங்களுடன் பிரதமரிடம் மனுவாக அளித்தார். மேலும், இந்த புயல் நிவாரண நிதிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும், தற்காலிக புனரமைப்புக்காக உடனடியாக ரூ.1,500 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதேபோன்று, புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி, மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்து, புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் உடனடியாக மத்திய குழுவை புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பார்வையிட உத்தரவிட்டுள்ளார். 7 பேர் கொண்ட மத்திய அரசின் உயர் அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். டேனியல் ரிச்சர்ட் (மத்திய உள்துறை இணை செயலாளர்) தலைமையில் கவுல் (மத்திய நிதித்துறை ஆலோசகர்), வத்சலா (மத்திய வேளாண்மை துறை இயக்குனர்), மானிக் சந்திரா பான்ட் (மத்திய ஊரக வளர்ச்சி துறை துணை செயலாளர்), வந்தனா சிங்ஹால் (மத்திய எரிசக்தி துறை தலைமை பொறியாளர்), ஹர்ஷா (மத்திய நீர்வள ஆதாரத்துறை இயக்குனர்), இளவரசன் (மத்திய போக்குவரத்து துறை கண்காணிப்பு பொறியாளர்) ஆகிய 7 பேர் கொண்ட குழு இன்று மாலை டெல்லியில் இருந்து உடனடியாக சென்னை வர உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள்.

இதைத்தொடர்ந்து, நாளை காலை சென்னை, தலைமை செயலகத்தில் மத்திய குழுவினர் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் வருவாய்த்துறை, நிதித்துறை, வேளாண் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். இந்த ஆலோசனையின்போது, மத்திய குழுவுக்கு `கஜா’’ புயல் பாதிப்பு குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களுடன் விளக்கி கூறப்படும்.பின்னர், நாளை காலையே சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குழுக்களாக பிரிந்து நேரில் சென்று பார்வையிடுவார்கள். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை அவர்கள் நேரில் சந்தித்து பேசுவார்கள். தொடர்ந்து 3 நாட்கள் அதாவது 26ம் தேதி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு செய்யும்.இதைத்தொடர்ந்து வருகிற 27ம் தேதி மத்திய குழுவினர் மீண்டும் சென்னை வந்து, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள், துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். அப்போது, முதல்வர், புயல் பாதிப்பு குறித்த விளக்கமாக ஒரு மனுவை மத்திய குழுவிடம் மீண்டும் வழங்குவார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும், மத்திய குழுவினர் டெல்லி திரும்புவார்கள். டெல்லி, சென்று புயல் பாதிப்பு குறித்த தங்களது விளக்கமான அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் வழங்குவார்கள். அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பு மற்றும் நிரந்தர புனரமைப்புக்கான நிதியை பிரதமர் மோடி வழங்குவார் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : team ,Chennai , Gajah Storm, Central Committee, Tamilnadu
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...