×

மீண்டும் தலைதூக்கும் ஆசிரியர் பணியிட மாறுதல் ஊழல் : விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 400க்கும்  மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நிர்வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 175 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அரசு, நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆசிரியர்களை அவர்கள் விரும்பும் பள்ளிகளுக்கு  இடமாற்றம் செய்வதன் மூலம் அரசு பள்ளிகளை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளாக மாற்றி  வருகிறது. வட மாவட்ட பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டிய அரசு, இருக்கும் ஆசிரியர்களையும் நிர்வாக  மாறுதல் என்ற பெயரில் இடமாற்றம் செய்து வருகிறது. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.

கடந்த ஒரு  மாதத்தில் ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  ஒரு மாறுதலுக்கு ₹7 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.  கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏராளமான ஆசிரியர்கள் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டனர். அதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. இடையில் சில காலம் ஓய்ந்திருந்த நிர்வாக மாறுதல் ஊழல் இப்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆசிரியர்கள் இடமாறுதல் குறித்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் இம்மாத தொடக்கத்தில் அளித்த தீர்ப்பில் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்காக தனிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு ஆணையிட்டிருந்தது. அத்தகைய கொள்கையை உருவாக்க வேண்டிய அரசு, அதற்கு முன்பே ஆசிரியர்களை மாற்றம் செய்து கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆளுனர் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி,  வட மாவட்டங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rebirth Teacher Workplace Corruption: Ramadoss , Teacher Workplace Corruption,Ramadoss's assertion , investigate
× RELATED சொல்லிட்டாங்க…